பக்கம் எண் :

முன்னுரை 71

நாலாவதற்கு,

“இதற்கும் உதாரணம் இக்காலத்து இறந்தன. அன்றி, வரும் வண்ணக்கன் என்றாற்போல்வன காட்டின், 'வகார மிசையு மகாரங் குறுகும்' (எழு. 330) என்ற விதி வேண்டா வாம்” என்றும் கூறினதேயாம். இக் கூற்றுக்குக் காரணம் நச்சினார்க்கினியர் தொகைச் சொல்லை (compound word) ஒரு சொல்லாகக் கொள்ளாமையும், கூறியது கூறலுக்கும் வழிமொழிதலுக்கும் வேறுபாடறியாமையுமே யாகும்.

“எல்லாத் தொகையும் ஒருசொல் நடைய”

(எச்ச. 24)

என்றார் தொல்காப்பியர்.

தண்ணீர், புன்செய், மண்கொண்டான், பிழைபொறுத் தான் முதலிய தொகைப்பெயர்கள் எல்லாம் ஒருசொல் நடையவதால் காண்க.

நெஸ்பீல்டு (Nesfield) என்பவர், தம் ஆங்கில இலக் கணப் புத்தகத்தில், “ஒருசொல் தன்மையடையும்படி இரு சொல் புணர்ந்தது தொகைச்சொல்” என்றுகூறி ink-pot (மைக் கூடு), door-step (படிக்கட்டு), horse-shoe (குதிரைக் குளம் பாணி), drinking-water (குடிநீர்) என்று உதாரணங் காட்டினர்.1

இனி, நச்சினார்க்கினியர் கொள்கைப்படி கொள்ளின்; கூறியது கூறலாகத் தொல்காப்பியத்தில் எத்தனையோ நூற் பாக்களிருக்கின்றன.

“புணரியல் நிலையிடைக் குறுகலு முரித்தே
உணரக் கூறின் முன்னர்த் தோன்றும்”

என்று நூன்மரபிற் கூறியதை,

“யகரம் வரும்வழி இகரங் குறுகும்
உகரக் கிளவி துவரத் தோன்றாது”

எனக் குற்றியலுகரப் புணரியலுள்ளும்,

“மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்”

என்று நூன்மரபிற் கூறியதை,

“மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையல்”

என்று புணரியலுள்ளும்,


1. 4ஆம் புத்தகம், ப. 353