பக்கம் எண் :

முன்னுரை 75

தமிழிலும், செய்யுளில் ஓசை குறைந்தவிடத்து, ஆங்கிலத்திற் போல அசையழுத்தம் குறிலை நீட்டுவதாகும்.

“ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்” என்ற செய்யுளில், கெடும் என்னும் சொல்லின் முதலெழுத்து நீண்டு, அசைச்சீருக்கு இயற்சீர்த்தன்மை யூட்டினமை காண்க.

இதை,

“ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்”

“பையச் சென்றால் வையந் தாங்கும்”

என்னும் இசை நிரம்பின செய்யுள்களோடும் ஒப்பிட்டறிக.

(2) காலப்பிரிவு

ஆங்கிலத்தில், இறப்பு நிகழ்வு எதிர்வு என்னும் முக் காலங்களுள், ஒவ்வொன்றையும் நந்நான்காகப் பகுப்பர். தமிழுக்கும் இது ஏற்றதாதல் காண்க.

நிகழ்காலம் (Present Tense)

1. அவன் வருகிறான் - செந்நிலை (Indefinite).

2. அவன் வந்துகொண்டிருக்கிறான் - தொடர்ச்சி (Continuous).

3. அவன் வந்திருக்கிறான் - நிறைவு (Perfect).

4. அவன் வந்துகொண்டிருந்திருக்கிறான் - நிறைவுத் தொடர்ச்சி (Perfect Continuous).

இங்ஙனங் கலவைக்காலங்(Compound Tense)களை ஒரு வினையாகக் கொள்ளாவிடின், குறைவு நேர்தல் காண்க.

(3) நிகழ்கால வினையெச்சம் (Infinitive Mood)

நிகழ்கால வினையெச்சமும் பெயர்நேரி (noun-equivalent) யாய் எழுவாயாதல் கூடும்.

எ-டு: எனக்குப் பாடத்தெரியும்.

இதில், 'பாட' என்பது, பாடுதல் அல்லது பாட்டு என்று பொருள்பட்டு எழுவாயாதல் காண்க. இவ் வுண்மை ஆங்கில இலக்கணத்தினாலேயே அறியப்பட்டது.