3. மொழிக்குலம் உலகத்திலுள்ள மொழிகளெல்லாம், வேர்ச்சொற்களின் உறவும் இலக்கண வொற்றுமையும்பற்றி, துரேனியம் (Turanian), ஆரியம் (Aryan), சேமியம் (Semitic) என முக்குலங் களாக வகுக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு குலமும் பல குடும்பங்(family)களைக் கொண்டது. ஒவ்வொரு குடும்பமும் சில அல்லது பல மொழிகளைக் கொண்டது. தமிழ் துரேனியக் குலத்தில் 1திராவிடக் குடும்பத்தைச் சேர்ந்தது. துரேனியத்திற்குச் சித்தியம் (Scythian) என்றும் ஆரியத்திற்கு இந்தோ-ஐரோப்பியம் (Indo-European), அல்லது இந்தோ-ஜெர்மானியம் (Indo-Germanic) என்றும் பிற பெயர்களுமுண்டு. மொழிப் பகுப்புமுறை - Classification of Languages மொழிப் பகுப்புமுறை, (1) வடிவுமாறியல் (Morphological), (2) மரபுவரிசையியல் (Historical or Geneological) என்ற இரு முறை பற்றியது. இவற்றுள், முன்னையது மொழிகளை அசை நிறை முதலிய அறுவகை நிலையாகப் பகுப்பது; பின்னையது, வேர்ச்சொற்(root)களின் உறவும், இலக்கண வொற்றுமையும் பற்றிப் பகுப்பது. இவ் விரண்டும் முன்னர்க் கூறப்பட்டன. மாக்கசு முல்லர், அசைநிலையை வேர்நிலை (Radical Stage) என்றும், பகுசொன்னிலையை ஈற்றுநிலை (Terminational Stage), இருதலைச் சிதைநிலை (Inflectional Stage) என்றும் இரண்டாகப் பகுத்தும் கூறுவர். பகுசொன்னிலையும் ஈற்றுநிலையும் ஒன்றே. இரு தலைச் சிதை நிலையாவது, வருமொழிபோன்றே நிலை மொழியும் சிதைதல். கா : பெருமகன் - பெம்மான். மொழிநூல் மொழிநூலாவது சொற்கள், சொல்லாக்க முறைகள், இலக்கண அமைதி முதலியனபற்றிப் பல மொழிகட்கிடையி லுள்ள தொடர்பை ஆராயுங் கலை.
1. திராவிடக் குடும்பம், ஒரு சிறு குழுவாயிருந்தாலும் முக்குலத்தி னின்றும் வேறாகத் தனித்துக் கூறப்படற்குரியதென்பது பின்னர்க் காட்டப்படும்.
|