பக்கம் எண் :

மொழிநூல்97

என்ற முறையிலேயே அமைவனவென்றும் கூறியுள்ளார் ரெட்டியார்.

தன்வினைப் பகுதியின் ஈற்றெழுத்தில் அழுத்தம் (stress) விழுவதால் அது பிறவினையாகக் கூடுமென்பது,

“உப்ப கார மொன்றென மொழிப
இருவயி னிலையும் பொருட்டா கும்மே”

(தொல்.மொழி. 43)

என்னும் நூற்பாவாற் குறிக்கப்பட்டது. ஆடு, போகு முதலிய தன்வினைகளின் ஈற்றெழுத்துகள்மேல், அழுத்தம் விழுவதா லேயே, அவை இரட்டிக்கின்றன. அசையழுத்தத்தாற் பொருள் வேறுபடுவது, மொழிநூலில் ஒப்புக்கொள்ளப்பட்ட உண்மை. சீனமொழியில் இந்நெறிமுறை மிகுதியும் பயில்கின்றது.

அசையழுத்தம் முதலாவது எடுப்பசையாக இருந்ததே யன்றி, வலியிரட்டலாக இல்லை. நாளடைவில் அழுத்தம் மிகமிக வலியிரட்டலாகத் தோன்றிற்று. அப்போது அதை இரட்டித் தெழுதினர். அதற்குமுன்பே தபு என்னும் வினை வழக்கற்றுப் போனதினால் அது பண்டை முறைப்படி எடுப்பசையால் பிறவினையாவதாகவே குறிக்கப்பட்டுவந்தது, தொல்காப்பியரும் முன்னூல்களைப் பின்பற்றி அங்ஙனமே குறித்தார். இதை 'ஒன்றென மொழிப' என்று, வழிநூன் முறையில் ஆசிரியர் கூறுவதால் அறியலாம்.

காடு, ஆறு முதலிய சொற்கள், அவற்றொடு பொருட் பொருத்தமுற்ற பிற சொற்களுடன் புணரும்போது இரட்டித் தல், அவ்வப் புணர்மொழிகளால் குறிக்கப்படும் பொருள் களுக்குள்ள நெருங்கிய அல்லது ஒன்றிய தொடர்பைக் காட்டுவதாகும்.

கா : காட்டுவிலங்கு, ஆற்றுநீர்.

நட்டாறு, குற்றுகரம் என்பனவும் இம் முறைபற்றி யனவே. இதை, இரு பொருள்களை இணைப்பதால் உண்டா கும் இறுக்கத்திற் கொப்பிடலாம்.

புகு, சுடு முதலிய வினைகள் புக்கு, சுட்டு என இரட் டித்து இறந்த காலம் காட்டினதும், அசையழுத்தத்தினா லேயே. புக்கு, சுட்டு என்பன பண்டைக் காலத்தில் முற்றா கவும் எச்சமாகவும் வழங்கப்பட்டன. பின்பு, பால் காட்டும் ஈறு சேர்ந்து புக்கான் (புக்கு + ஆன்), சுட்டான் (சுட்டு + ஆன்) என்று முற்றுக்குத் தனி