(2) முதலில் நெடிலாயிருந்த சுட்டுவினா வெழுத்துகள் பின்பு குறிலாயின. (3) குறிலும் நெடிலுமான சுட்டுவினா வெழுத்துகள் பல ஈறுகளைக் கொண்டிருந்தன. கா : ஆம், ஆண், அம், அன், அல், அவ், அண் முதலியன. இவற்றுள் ஆம் அம் என்பவை முந்தினவாகத் தெரிகின்றன. ஆகு - ஆங்கு. ஆண் - ஆண்டு. அம் - அந்து - அந்த - அந்தா. அது - அதா - அதோ - அதோள் - அதோளி. அம் - அன் - அன்ன - அன்னா. அன்ன - அனை - அனைத்து, அம் - அங்கு. அம் - அம்பு - அம்பர். அல் - அள் - அண். அம் - அவ், அல் - அன் என்றுங் கூறலாம். அல் + து = அன்று. ஒ.நோ: எல் + து = என்று (சூரியன்). அல் இல் எல் என்னும் வடிவமும் சுட்டுவினாச் சொற்கட்குண்டென்பதை, அன்று இன்று என்று என்னும் தமிழ்ச்சொற்களாலும், அல ஏலா என்னும் தெலுங்குச் சொற்களாலும், அல்லி இல்லி எல்லி என்னும் கன்னடச் சொற்களாலும் உணர்ந்து கொள்க. அல் என்னும் வடிவமே இல் எனத் திரிந்து, சேய்மைச் சுட்டாக இலத்தீனில் வழங்குகின்றது. கா : | ille - அவன் | illa - அவள் | illi, illae - அவர் illa - அவை | illud - அது |
(4) அன் என்பதை ஒருமைக்கும் அம் என்பதைப் பன்மைக்கும் முதலாவது வழங்கினதாகத் தெரிகிறது. நோக்குக: ஏன், ஏம்; நீன் நீம்; தான், தாம்.
|