ஆல், ஓடு என்னும் ஈருருபுகளும், தனித்தனி கருவி உடனிகழ்ச்சி யென்னும் இருபொருளிலும் வழங்கும். கா : ஊரானொருகோயில் = ஊருடன் அல்லது ஊர் தொறும் ஒரு கோயில். கொடியொடு துவக்குண்டான் = கொடியால் துவக்குண்டான். கருவி உயர்திணை அஃறிணையென இருவகை. அவற்றுள் உயர்திணைக் கருவியே, எழுவாய் (கர்த்தா) என்று பிரித்துக் கூறப்படுவது. இவற்றையெல்லாம் நோக்காது, 3ஆம் வேற்றுமை வேறுபட்ட பொருள்களை யுடையதென்றும், வடமொழியைப் பின்பற்றியே தமிழில் எட்டு வேற்றுமை யமைக்கப்பட்டன வென்றும் கூறினர் கால்டுவெல் ஐயர். கொண்டு என்பது உடனிகழ்ச்சிப்பொருட் சொல்லுருபு. கொண்டு = பிடித்து. உளிகொண்டு = உளியைக் கையிற் கொண்டு. 4 ஆம் வேற்றுமையுருபு. இஃது ஒக்க என்னும் வினையெச்சத்தின் திரிபாயிருக்கலாம். மழவன் நம்பியொக்கக் கொடுத்தான், திருவாணன் (ஸ்ரீநிவாசன்) ஊரொக்கப் போனான், என்பவை பொருத்தமாயிருத்தல் காண்க. ஒக்க- (ஒக்கு) - உக்கு (அக்கு) - கு. கா : அழகன் + உக்கு = அழகனுக்கு. என் + அக்கு = எனக்கு. அவன் + கு = அவற்கு. பொருட்டு (பொருள் + து) நிமித்தம் என்பவை 6ஆம் வேற்றுமையுருபோடும், ஆக என்பது குவ்வுருபோடும் கூடி 4ஆம் வேற்றுமைச் சொல்லுருபாக வரும். 5ஆம் வேற்றுமையுருபு இல், இன். இல் (7ஆம் வே.உ.) - இன், இருந்து, நின்று என்னும் எச்சங்கள், இல் இன் என்பவற்றோடு சேர்ந்துவரும். இவற்றுள் முன்னது இருந்த நிலையையும் பின்னது நின்ற நிலையையுங் குறிக்கும்.
|