பக்கம் எண் :

138ஒப்பியன் மொழிநூல்

சொல்லீறாகாதென்று கொண்டு, பிற்காலத்தார் இகரஞ் சேர்த்திருக்கலாம். குரீ - குரீஇ (குருவி) = குறியது. தழுவு குருவு (குறுகு) என்னும் பிற்றை வடிவங்கள், தழுவி குருவி என வினையெச்சம் (அல்லது தொழிற்பெயர்) அல்லது தொழிலிபெயர் ஆகும். 'இ' என்னும் ஈறு இம் முப்பொருளிலும் வரும்.

குழு மரு உறு என்பவை குழூ மரூ உறூ என்று தொழிற்பெயராயின. குழூஉ மரூஉ உறூஉ என்பன பிற்கால வடிவங்கள். ஆடூஉ மகடூஉ என்னும் வடிவங்கள் இன்னிசை பற்றி முன்னவற்றைப் பின்பற்றியவை. ஆண் - ஆடு - ஆடூஉ. மகள் - மகடு - மகடூஉ. ஆடு + அவன் = ஆடவன்.

நிகழ்கால வினையெச்சம் என்று 'செய்துகொண்டு' (doing) என்னும் வாய்பாட்டைக் கூறினால் கூறலாம். 'செய்ய' என்பது உண்மையில் நிகழ்கால வினையெச்சமன்று, அது எதிர்கால வினையெச்சமாகவே கூறற்குரியது.

செய்யியர் செய்யிய செய்ய என்பவை வியங்கோள் வினையைக் கூறுமிடத்துக் கூறப்படும்.

செய்யின் = செய் (தொழிற்பெயர்) + இன் (5ஆம் வே. உ. ஏதுப்பொருள்).

செய்தால் = செய்து (தொழிற்பெயர்) + ஆல் (3ஆம் வே. உ.)

செயற்கு = செயல் + கு (4ஆம் வே. உ.).

செய்ம்மன = செய்யும் (எ. கா. வி. மு.) + என = செய்யுமென- செய்ம்மென - செய்ம்மன = செய்யும் என்னும்படி.

பின், முன், கால், கடை, வழி, இடத்து, போது முதலிய வினையெச்சவீறுகள் காலப்பெயர்களும் இடப்பெயர்களுமாகும். இவை பெயரெச்சத்தோடு சேர்ந்து அதற்கு வினையெச்சத் தன்மையுண்டாக்கும் சொல்லீறுகளாகும்.

அடுக்கீற்று வினைமுற்றுகள்

சில வினைமுற்றுகளில் ஈறுகள் அடுக்கிவரும்.

கா : செய்தான் - செய்தன் + அன் = செய்தனன், + அள் = செய்தனள், + அர் = செய்தனர், + அ = செய்தன.