(3) குடத்திற் பிறந்தது மேற்குத் தொடர்ச்சிமலை முற்காலத்தில் குடமலை யெனப்பட்டது. தென்மதுரையைக் கடல் கொண்டபின், அகத்தியரிருந்தது பொதியமலை. அது குடமலையின் ஒரு பகுதி. குடதிசையில் அல்லது குடமலையிலிருந்தமைபற்றி அகத்தியர் குடமுனிவர் என்று கூறப்பட்டிருக்கலாம். பழைமையர் தமது வழக்கம்போல் அதன் உண்மைப் பொருளைக் கவனியாது, குடத்திற் பிறந்தவராகக் கதை கட்டி, அதன் மறுபெயர்களான கும்பம் கலசம் முதலிய சொற்களாலும் அவர்க்குப் பெயரமைத்திருக்கலாம். ஆர்க்காட்டுப் புராணத்தில், ஆர்க்காடு என்னும் பெயரை ஆறுகாடு என்று கொண்டு, அதைச் சடாரண்யம் என்று மொழி பெயர்த்திருப்பதாகப் பண்டிதமணி கதிரேசச் செட்டியார் கூறுவர். (4) அங்குட்ட அளவாயுள்ளது அகத்தியர் குள்ளமாயிருந்ததினால் குறுமுனிவரென் றும் குட்டமுனிவரென்றுங் கூறப்பட்டார். குட்டை - குட்டம். ஒ.நோ பட்டை - பட்டம், தட்டை - தட்டம். செய்யுளடிகள் குறளுஞ் சிந்துமாய்க் குறுகி வருவது குட்டம் படுதல் என்றும், கைகால் விரல்கள் அழுகிக் குட்டையாகும் தொழுநோயும் குரங்குக்குட்டியுங் குட்டமென்றுங் கூறப்படுதல் காண்க. குட்டத்தைக் குஷ்டமென்பர் வடநூலார். ஒ.நோ. கோட்டம் கோஷ்டம் (வ.), முட்டி - முஷ்டி (வ.). சில பெயர்களில், அம் என்னும் முன்னொட்டுச் சேர்தல் இயல்பு. கா : அங்கயற்கண்ணி, அங்காளம்மை. இங்ஙனமே குட்டமுனி என்னும் பெயரும் அங்குட்டமுனி என்று ஆகியிருக்கலாம். அங்குட்டன் என்று ஏற்கெனவே பெருவிரலுக்குப் பெயர். குட்டையாயிருப்பதால் கட்டைவிரல் குட்டன் எனப்பட்டது.
|