(2) “என்ப”, “என்மனார் புலவர்”, “என மொழிப”, “என்றிசினோரே” என்று தொல்காப்பியர் முன்னூலாசிரியரைப் பல்லோராகக் குறித்தல். (3)“களவினுங் கற்பினுங் கலக்க மில்லாத் தலைவனுந் தலைவியும் பிரிந்த காலைக் கையறு துயரமொடு காட்சிக் கவாவி எவ்வமொடு புணர்ந்து நனிமிகப் புலம்பப் பாடப் படுவோன் பதியொடு நாட்டொடு முள்ளுறுத் திறினே யுயர்கழி யானந்தப் பையு ளென்று பழித்தனர் புலவர்” என்று அகத்தியர் முன்னோர் மொழிபொருளை எடுத்தோது தல். சிலர் ஆனந்தக் குற்றம் பிற்காலத்துத் தோன்றியதென்று கூறுவர். அது தவறாகும். “கணவனொடு முடிந்த படர்ச்சி நோக்கிச் செல்வோர் செப்பிய மூதா னந்தமும்” | (புறத். 19) |
என்று ஆனந்தப் பெயர் தொல்காப்பியத்திற் கூறப்படுதல் காண்க. “ஏழியன் முறைய தெதிர்முக வேற்றுமை வேறென விளம்பான் பெயரது விகாரமென் றோதிய புலவனு முளனொரு வகையா னிந்திர னெட்டாம் வேற்றுமை யென்றனன்” என்று அகத்தியர் தமக்கு முந்தின இரு நூலாசிரியரை விதந்துங் கூறினர். அகத்தியத்திற்குமுன், இந்திரன் என்றொரு புலவன் இயற்றிய ஐந்திரம் என்னும் இலக்கணம் இருந்தமை, “மல்குநீர் வரைப்பின் ஐந்திர நிறைந்த தொல்காப் பியன்எனத் தன்பெயர் தோற்றி” என்று தொல்காப்பியப் பாயிரத்திற் கூறியதா லறியலாம். “ஏழியன் முறையது” என்னும் அகத்திய நூற்பாவில் குறிக்கப்பட்ட இரு நூல்களையும் முறையே வடமொழி இலக்கண நூல்களாகிய பாணினீயமும் ஐந்திரமுமெனக் கொண்டனர் பல்லோர். இது தமிழின் தொன்மையை அறியாமையால் நேர்ந்த தவறாகும்.
|