பக்கம் எண் :

தொகைகள்54கி. செம்பியன்

12. பண்புத் தொகை (அல்வழிப் புணர்ச்சி)

      ஒரு பொருளின் பண்பினைப் பாகுபடுத்தி (சிறப்பித்துப் பொருளின்
பொதுத்தன்மையை நீக்கி) உரைக்கும்போது ஆகிய எனும் பண்புருபு மறைந்து
வந்தால் அது பண்புத்தொகை.

      பண்புச் சொல் 'ஆகிய' தொகாது 'பெயர்' தொக்கி வந்தால் அதுவும்
பண்புத்தொகையாம்; அதனை இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை எனப்
பிற்காலத்தார் வழங்கலாயினர்.

      இது வண்ணம், வடிவு, அளவு, சுவை என்னும் நான்கின் அடிப்படையில்
பிறக்கும். அளவு என்பதில் எண்ணல், நீட்டல், நிறுத்தல், முகத்தல் அளவுகள்
அனைத்தையும் கருதவேண்டும்.

எடுத்துக்காட்டு்
கருங்குதிரை (வண்ணம்)
வட்டப்பலகை (வடிவு)
நெடுமாறன் (அளவு)
தீங்கரும்பு (சுவை)
பண்புத்தொகை
சாரைப் பாம்பு
வேழக்கரும்பு
கேழற்பன்றி
இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை

இவற்றை விவரிக்கும்போது,
சாரை என்னும் பாம்பு
வேழம் என்னும் கரும்பு
கேழல் என்னும் பன்றி
எனக் கொள்ளலாம். இரு பெயரொட்டுப் பண்புத்தொகைக்கு நன்னூலார் 'ஒரு
பொருளுக்கு இருபெயர் வந்த' என்று விளக்கம் தந்துள்ளார். பாம்பு பொதுச்சொல்;
அது என்ன பாம்பு என்று கேட்கின்றபோது சாரை என்னும் பாம்பு என்கிற பதில்
பிறக்கிறது. பாம்பின் குணத்தைச் சொல்லாமல் வகையைக் குறிக்கிறது; இஃது இரண்டு
பண்புத் தொகைகளுக்கும் உள்ள வேறுபாடு.