பக்கம் எண் :

6நல்ல தமிழ் எழுத வேண்டுமா?


கொண்டி, கோண்டு, குய் - கூவி என்பன மத்திய திராவிட மொழிகளாகும்.
துளு, கூர்க், துதம், கோதம் என்பன தென் திராவிட மொழிகளாகும்.
இவ்வாறு பேராசிரியர் பரோ கூறுவர். வடமொழி ஆரிய இனத்தைச்
சேர்ந்தது. வட இந்திய மொழிகளுள் பெரும்பாலன ஆரியத் திராவிட
இனத்தைச் சேர்ந்தவை.

தமிழைப் பற்றிப் பொதுவாக இருவகைக் கொள்கைகள் உலவி
வருகின்றன. திராவிட மூலமொழி ஒன்று இருந்தது என்றும், அம்மூலத்
திராவிடத்திலிருந்தே தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், குடகு,
துளு முதலிய திருந்திய திராவிட மொழிகளும், துதம், கோதம், கோண்டு,
கூ, ஓரியன், இராசமகால் முதலிய திருந்தாத திராவிட மொழிகளும்
தோன்றின என்றும் ஒருசாரர் கூறுவர். மற்றொரு சாரார், மற்றத்
திராவிட மொழிகள் தமிழ் பெற்ற சேய்களே என்பர். இக்கொள்கையை
முதன்முதலாகக் குறிப்பிட்டவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை ஆவார்.
அவர் தமது ஒப்புயர்வற்ற `மனோன்மணீயம்` என்னும் நாடகத்திலுள்ள
தமிழ் வாழ்த்தில்.

"கன்னடமும் களிதெலுங்கும்

கவின்மலையா ளமும்துளுவும்

உன்னுதரத்து உதித்தெழுந்தே

ஒன்றுபல வாயிடினும்"

என்று பாடியிருக்கக் காணலாம். இக்கொள்கையினர் திராவிட
மூலமொழி என்பது கற்பனை என்றும், பழந்தமிழே திராவிட
மொழிகளின் தாய்மொழி என்றும், தமிழ் மொழியிலிருந்தே திருந்திய
திராவிட மொழிகளும் திருந்தாத திராவிட மொழிகளும்
தோன்றியுள்ளன என்றும், மலையாள மொழி தமிழிலிருந்து
கி.பி.10-ஆம் நூற்றாண்டில் தோன்றிய கிளைமொழியே என்றும்
குறிப்பிடுகின்றனர். இக்கொள்கை இப்பொழுது வலிவுற்று வருகிறது.
நடுவு நிலையினின்று நோக்குவார்க்குத் திராவிட மொழியினத்தின்
தாய், பழந்தமிழே என்பது நன்கு புலனாகும்.