பக்கம் எண் :

இசைத் தமிழ்73

தம

    தமிழரின் இசையுணர்ச்சி தலையாயது. அதனாலேயே, இழவுக்கு அழுவதைக்கூட இசையோடு அழுவது தமிழ்ப்பெண்டிர் வழக்கம். தமிழர் இசையில் சிறந்திருந்ததினால்தான் இசையை மொழிப்பகுதி யாக்கி இசைத்தமிழ் என்றனர். அதோடு நில்லாது,  நாடகத்தையும் சேர்த்து முத்தமிழ் என வழங்கினர். இயற்றமிழின்றி இசைத்தமிழில்லை; இயற்றமிழும் இசைத்தமிழு மின்றி நாடகத்தமிழு மில்லை. ஆகவே, இயலிசை நாடகம் மூன்றும் முறையே ஒருதமிழும் இருதமிழும் முத்தமிழுமாகும். இங்ஙனம் இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதியாக்கினது வேறெந் நாட்டிலு மில்லை.

    இசையென்னும் தனிச்சொல் முதலாவது இசுவென்று (hissing) ஒலிக்கும் இயல்பான ஓசையைக் குறித்து, பின்பு இனிய ஓசையாகிய பண்ணைக் குறித்தது. இணைத்தலைக் குறிக்கும் இசை என்னும் சொல் வேறு. வடமொழியில் கீதம்(பாட்டு) என்னும் பெயர் சம் என்னும் முன்னொட்டுப் பெற்றுச் சங்கீதம் என்றாகி இசைக்கலையைக் குறித்தது. இதனால், இசைத்தமிழ் முந்தின  தென்றும் இயல்பான தென்றும் அறியலாம்.

    இசைத்தமிழ் பற்றிய தொல்காப்பியச் சான்றுகள்:

    "அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
    உளவென மொழிப இசையொடு சிவணிய
    நரம்பின் மறைய என்மனார் புலவர்."

(எழுத்து. 33)

    "தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப."    

(அகத். 20)

    "துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே"

(களவு. 1)

    "பாணன் பாடினி இளையர் விருந்தினர்
    கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர்’’    

(கற்பு. 52)

    "பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே"    

(செய். 173)

    தொல்காப்பியம் இடைச்சங்க நூல். இதன் காலம் கி.மு. 2000. இஃது ஒரு வழிநூலாதலின் இதிற் கூறப்பட்டுள்ளவை யெல்லாம் தலைச்சங்க நூல்களிற் கூறப்பட்டவையே.

இசைத்தமிழ்த் தேர்ச்சி

இசைக் குரியவை சுரம், பண், தாளம், பாட்டு, கருவி என ஐந்து. அவற்றுள் சுரம் ஏழு. அவற்றின் பெயர் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. அவற்றை இசைமுறையிற் பயிலும்போது, முற்காலத்தில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழ் நெடில்களாலும், பிற்காலத்தில் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துகளாலும் குறித்தார்கள். எழுசுரத்தின் ஏற்ற முறைக்கு ஆரோசை என்றும்,  இறக்க முறைக்கு