பக்கம் எண் :

தமிழர் மதம் 41

சிலப்பதிகாரக் கூற்றும்(5 : 169), சிவமதத்தின் தலைமையை யுணர்த் தும். உலக மெல்லாம் உடையவர் என்பதுபற்றி, சிவனுக்குப் பெருவுடையார் என்றும் பெயர். "ஏழுடையான் பொழில்" (திருக்கோ. 7).

(2) திருமால் மதம்

திருமால் நிறமும் பெயரும்

    எல்லாம் வல்ல இறைவனையே, முல்லைநிலத் தெய்வ அடிப் படையில் நீரின் கூறாகக் கொண்டு, நீரைப் பொழியும் முகில்நிறம் பற்றி மாயோன்(மாயன், மாயவன்) என்றும், மாலோன்(மால், மாலன், மாலவன்) என்றும், கார் வண்ணன்(கரியன், கரியவன்) என்றும் முகில் கூடும் வானிறம்பற்றி நீல வண்ணன்(மணிவண்ணன், கடல் வண்ணன்) என்றும், பெயரிட்டு வழிபட்டு வந்துள்ளனர் ஒருசார் தமிழர். மால் என்னும் பெயர் அடையடுத்துத் திருமால், பெருமால் என வழங்கும். பெருமால் - பெருமாள்.

    முகிலுக்கும் அது நிற்கும் வானிற்கும் விண் என்னும் பெய ருண்மையால், அப் பெயரை அடியாகக் கொண்ட விண்டு என்னும் பெயரும் திருமாலுக்கு ஏற்பட்டது.

      விள்ளுதல் = விரிதல், திறத்தல், வெளியாதல்.
      விள் - விண் = வெளி, வானம், முகில், மேலுலகம்.
      விண் - விண்டு = வெளி, வானம், முகில், திருமால், மேலுலகம்.

    பச்சை நிறம் நீலநிறத்திற்கு இனமாதலால், பச்சையன், பச்சையப்பன் என்னும் பெயர்களும் திருமாலிற்குத் தோன்றின.

திருமாலிருக்கை

    விண்டு + நகர் = விண்ணகர் = 1. திருமால் கோவில், திருமால் வீட்டுலகம்.

    விண்ணகர் - விண்ணகரம்.

    பரம பதம் = பரமன் பதிந்திருக்கும் இடம், வீட்டுலகம், திருமாலுலகம்.

திருமால் மலரணி

    முல்லை நிலத்திற்குரிய துழாய்மாலை.

திருமால் ஊர்தி