பக்கம் எண் :

தமிழர் மதம் 49

2

இடைநிலை யியல்

    ஆரியர் இந்தியாவிற்குட் புகுந்த காலம் தோரா. கி.மு. 1500. அவரது வேதக் காலம் கி.மு. 1500-1200.

1. ஆரியத் தெய்வங்கள்

தியசு (த்யஸ் - Dyas)

    தியசு = ஒளியுள்ள வானம், வானம், வானத்தெய்வம் இச் சொல் த்யௌஸ் (Dyaus), த்யௌக்ஷ் (Dyaush) என்ற வடிவுகளிலும் வழங்கும்.

    தீயும் தீப்போல் ஒளிதரும் சுடர்களும் ஒளிவடிவான தோற்றங்களும், முதற்காலத்தில் உலகமெங்கும் தெய்வங்களாக வணங்கப்பட்டன. குமரிநாட்டில் தீவணக்கமும் கதிரவன் வணக்க மும் தோன்றிப் பரவிய காலத்தில், ஆரியரின் முன்னோர் ஐரோப்பா விற்குப் பிரிந்து போயினர். அதனால், மேலை யாரியரும் கீழை யாரியரும் பிரியுமுன்னரே, சுடர்களெல்லாந் தோன்றும் வானத்தை ஒரு மூலத் தெய்வமாகக் கொண்டு, அதை வணங்கி வந்தனர்.

    ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பே, கிரேக்கமும், இலத்தீனும் வேத ஆரியமும் தோன்று முன்னரே, ஐரோப்பிய ஆரியர் வானத் தெய்வத்தைத் த்யுபாதர்(வானத் தந்தை) என்று பெயரிட்டு வணங்கி வந்ததாகவும்; அப் பெயர்(Dyu Patar) வேத ஆரியத்தில் Dyaush-Pitar என்றும், கிரேக்கத்தில் Zeus Pater என்றும், இலத்தீனில் Jupiter என்றும், பழைய நார்வேயத்தில் Tyr என்றும், திரிந்துள்ளதாகவும் மாகசு முல்லர்(Max Mueller) கூறுகின்றார்.

    தேயு அல்லது தெய்வு(தெய்வம்) என்னும் தென்சொல் தியூ அல்லது த்யு என்றும், தேவு என்னும் தென்சொல் திவ் என்றும் ஆரியத்தில் திரிந்துள்ளன.

    எ-டு : L. deus, divus, divinus.

          வே. ஆ. த்யு, த்யஸ், திவ், திவ.

திவ் என்னும் மூலத்தினின்று, ஒளியுள்ள இடத்தையுங் காலத்தை யுங் குறிக்கும் இந்திய ஆரியச் சொற்கள் தோன்றியுள்ளன.