"எழுதுங்காற் கோல்காணாக்
கண்ணேபோல்" (குறள்.
1285)
"இன்ன பலபல எழுத்துநிலை
மண்டபம்" (பரிபா. 1953)
எழுவுதல் என்பது இசைக்கருவியினின்று
ஒலியெழுப் புதலைக் குறிக்குமே யன்றி, எழுதுதலைக்
குறிக்காது.
பண்டைத் தமிழெழுத்துகளெல்லாம்
பிராமியின் திரிபான வட்டெழுத்துகளென்றும்,
கிரந்த வெழுத்துத் தென்னாட்டில் பிற் காலத்தில்
வடமொழிக்கென் றேற்படுத்தப் பட்டதென்றும்,
பொதுவாகக் கருதப்படுகின்றது. ஆயின்,
எழுத்துவடிவம்பற்றிய சில தொல்காப்பிய
நூற்பாக்களையும் நன்னூல் நூற்பாக்களையும், பண்டை
யேட்டுச் சுவடிகளையும் நோக்குமிடத்து, இக்
கருத்துப் பொருத்தமுடையதாய்த் தோன்றவில்லை.
இற்றை வழக்கிலுள்ள தமிழ் எழுத்துமுறையே
பண்டைவழக்கிலும் இருந்ததென்றும், பட்டயங்களிற்
பொறிக்கப்பட்டுள்ள வட்டெழுத்து வெட்டெழுத்து
எனப் பெயர்பெற்றிருக்கலா மென்றும்,
கிரந்தவெழுத்து பண்டைத் தமிழெழுத்தின் திரிபே
யென்றும், அது ஏட்டிற்குரிய ஆணி யெழுத்தென்றும்,
கொள்வதே பொருத்தமாகத் தோன்றுகின்றது.
இதற்குச் சான்றுகளும் ஏதுக்களுமாவன:
(1) மிகப் பழைமையான
தமிழேட்டிலும் இற்றை யெழுத்து வடிவேயிருத்தல்.
(2) இலக்கண நூல்கள்
இற்றையெழுத்து வடிவைத் தொன்று தொட்டதெனக்
கூறல்.
"தொல்லை வடிவின எல்லா வெழுத்தும்ஆண்(டு)
எய்தும் எகர ஒகரமெய் புள்ளி" (நன். 98)
என்று 13ஆம் நூற்றாண்டிலிருந்த பவணந்தி
முனிவர் கூறினார்.
கி.மு.7ஆம் நூற்றாண்டினதான
தொல்காப்பியத்தின் நூன்மரபு என்னும்
முதலியலில்,
"குற்றிய லிகரம் குற்றிய லுகரம்
ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும்" (2)
"உட்பெறு புள்ளி உருவா கும்மே," (14)
"மெய்யின் இயற்கை புள்ளியொடு
நிலையல்," (15)
"எகர ஒகரத் தியற்கையும் அற்றே," (16)
"புள்ளி யில்லா........உயிர்த்த
லாறே," (17)
எனக் கூறப்பட்டுள்ளது. இவ்
வியல்புகளிற் சில பட்டயவெழுத்திற்குப்
பொருந்தவில்லை.
|