பக்கம் எண் :

34திரவிடத்தாய்

திரவிடத்தாய்

மலையாள நாட்டு அல்லது சேரநாட்டுத் துறைமுகங்கள் பழந்தமிழ் நூல்களில் பெருங் கடல் வாணிக நிலையங்களாகக் கூறப்பட்டுள்ளன.
 
 
 
"செங்கோற், குட்டுவன் தொண்டி"
(ஐங்.178)
 
 
 
 
 
"..........................................சேரலர்
சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க
யவனர் தந்த வியன்மாண் நன்கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளங்கெழு முசிரி யார்ப்பென"
(அகம்.148)
 
 
 
 
 
"கலந்தந்த பொற்பரிசம்
கழித்தோணியாற் கரைசேர்க்குந்து
மலைத்தாரமும் கடற்றாரமும்,
தலைப்பெய்து மருநர்க்கீயும்
புனலங் கள்ளின் பொலந்தார்க் குட்டுவன்
முழங்குகடல் முழவின் முசிரி யன்ன"
(புறம். 343)
 
 
 
 
 
"இயற்றேர்க் குட்டுவன் வருபுனல் வாயில் வஞ்சி"
(பத்.3)
 
 
 
மலையாள நாட்டிலுள்ள பல சிவநகரங்களும் விண் ணகரங்களும் நாயன்மாராலும் ஆழ்வாராலும் பாடப்பட் டுள்ளன. கோகர்ணம் திருச்செங்குன்றூர் (கொல்லத்திற் கருகிலுள்ளது) என்பன அப்பராலும் சம்பந்தராலும் 7ஆம் நூற்றாண்டிலும், திருவஞ்சைக்களம் சுந்தரரால் 9ஆம் நூற்றாண்டிலும், நேரிற் பாடப்பட்டுள்ளன. திருமுழிக்களம், திருநாவாய், திருவல்லவாழ் என்பன திருமங்கையாழ்வார் 8ஆம் நூற்றாண்டில் நேரிற் சென்று கண்டவை. இவற்றுடன் திருவனந்தபுரம், திருவண்பரிகாரம், திருக்காட்கரை, திருப்புலியூர், திருச்செங்குன்றூர், திருவண்வண்டூர், திருவத்தரு, திருக்கடித் தானம், திருவாறன்விளை என்பன நம்மாழ்வாரால் (கி.பி. 920) குறிக்கப்படுகின்றன. வித்துவக்கோடு குலசேகராழ்வாரால் 8ஆம் நூற்றாண்டிற் பாடப்பட்டது (தமிழாராய்ச்சி, ப. 347) மேற்கூறிய திருநகரங்கள் 10ஆம் நூற்றாண்டுவரை செந்தமிழ் நிலையங்க ளாயிருந்திராவிட்டால் பாடல் பெற்ற நகரங்களாயிரா என்பது திண்ணம்.