முதலியன.
மேனாட்டு
மொழியாராய்ச்சிப் புலவர், இலக்கண ஒற்றுமையாலும் இலக்கியச் சொற்களின் ஒற்றுமையாலும்
வடமொழியைச் செருமன் மொழிக்கு இனமாகக் கண்டிருக்கின்றனர். ஆகவே, இந்திய ஆரியரும்
செருமானியரும் ஒரு காலத்தில் ஒரே வகுப்பினராய் ஒரேயிடத்தில் (மேலாசியா) வாழ்ந்திருக்க வேண்டும்.
சரித்திர நூல்களெல்லாம் பெரும்பாலும் கிறித்துவுக்குப் பிற்பட்டனவாதலின், அவர்க்கு முற்பட்ட
வரலாறுகளை யெல்லாம் உணர்தற்கு மொழிநூலே சிறந்த கருவியாகின்றது. ஒரு வகுப்பாரை இன்னாரென்று
உணர்தற்கு அவரது பேச்சினும் சிறந்த கருவி பிறிதொன்றில்லை.
"நிலத்திற்
கிடந்தமை கால்காட்டுங் காட்டுங்
குலத்திற் பிறந்தார்வாய்ச்
சொல்." (குறள். 959)
ஆகவே, இந்திய ஆரியர்
செருமானியர்க்கு இனமென்றும் அவர் பேசிய மொழியும் செருமனுக்கு இனமென்றும் அறியப்படும். அதை
அவ்விரு மொழிகட்கும் இன்றியமையாத சில பொதுச் சொற்களாற் காட்டுதும். இங்கிலீஷ் செருமன்
மொழியினின்றும் பிறந்ததாதலின், கீழ்வரும் இங்கிலீஷ் சொற்களெல்லாம் செருமனென்றே தெளிக.