பக்கம் எண் :

100தென்சொற் கட்டுரைகள்

12

12

எது தேவமொழி?

    உலகிலுள்ள (ஏறத்தாழ) மூவாயிர மொழிகளுள், ஒருசில, மறை நூலுடைமை பற்றித் தம்மைத் தூயமொழி (Holy Language) என்றும், அவற்றுள்ளும் சமற்கிருதம் தன்னைத் தேவமொழி (Divine Language) என்றும், போற்றிப் புகழ்ந்து கொள்கின்றன. தூயமொழி என்பதினும் தேவமொழி என்பது உயர்வானது. முன்னது மண்ணுலகத்தில் தெய்வத் தன்மை யடைந்த மக்கள் மொழி யென்றும், பின்னது விண்ணுலகத்தி னின்றோ வீட்டுலகத்தினின்றோ மண்ணுலகத்திற்கு வந்த தேவர்மொழி யென்றும், கருத்துப் பிறப்பிப்பன.

    உலகில் ஒரு மொழியும் தேவமொழி யன்று. ஒன்றைத் தேவமொழி யென்று குறிப்பின், அது புனைந்துரைவகையாகவே யிருத்தல் வேண்டும். அங்ஙனம் புனைந்துரை வகையிற் குறித்தற்கும், கீழ்க் குறிக்கப்பெறும் குணங்களனைத்தும் அதற்கிருத்தல் வேண்டும்.

  (1) உலகமொழி முதன்மை
  (2) ஒலியெளிமை
  (3) பன்மொழித் தாய்மை
  (4) ஒப்புயர்வற்ற பண்பாடு
  (5) தூய்மை
  (6) மறைநூலும் பல்கலை இலக்கியமும் உண்மை
  (7) மக்கட் பொதுவுரிமை
  (8) நடுநிலை அறங்கூறல்

    இவ் வெண்ணியல்புகளும் ஒருங்கே தமிழுக்குள. இவற்றுள் ஒன்றிரண்டே சமற்கிருதத்திற்குள்ளன.

     (1) வழக்கற்றுப்போன வேத ஆரிய மொழியும் அக்காலத்து வட்டார மொழிகளாகிய (தமிழ் உட்பட்ட) பிராகிருத மொழிகளும் கலந்த அரைச் செயற்கையான இலக்கிய மொழியே வடமொழி யென்று சிறப்பாய்க் கூறப்படும் சமற்கிருதமாம். (கி.மு. 2000).

    தமிழோ, மாந்தன் முதல் முதல் தோன்றிய (Lemuria என்னும்) குமரிநாட்டில், தானே தோன்றிய இயற்கை மொழியாம் (கி.மு. 50,000).

"ஓங்கலிடைவந்து......... தன்னே ரிலாத தமிழ்," என்னும் பழைய தனிப் பாவும் இதனைப் புலப்படுத்தும்.