'காலம்' என்னுஞ் சொல் எம்மொழிக்குரியது? | 69 |
7
7
'காலம்' என்னுஞ்
சொல் எம்மொழிக்குரியது?
வடமொழிக்கும் தென்மொழிக்கும் பொதுவாகவோ, அவ் விரண்ட னுள் ஒன்றற்கே சிறப்பாகவோ உரிய
பல சொற்கள்பற்றி அவ் விரு மொழி யாளர்க்கும் தொன்றுதொட்டு நிகழ்ந்துவரும் போர்
கற்றார் அனைவர்க்கும் தெரிந்ததே. அச் சொற்களுள் 'காலம்' என்பதும் ஒன்றாகும்.
ஒரு சொல்லை
ஒரு மொழிக்குரியது என்று கூறுதற்கு ஒப்பியன் மொழிநூல்( Comparative
Philology) அறிவு
இன்றியமையாது வேண்டப் படும். இந்தியாவில், சிறப்பாய்த் தமிழ்நாட்டில், மொழிநூல் என்னும்
பெயரையே கேட்டறியாதாருங்கூட, வடமொழிப்பற்றொன்றே காரணமாகப் பல தென்சொற்களை
வடசொற்களாகக் கூறி வருகின்றனர். அவருள்ளும் ஆங்கிலக் கல்விப்பட்டம் பெற்றவரோ
வென்றால், தம்மை எல்லா மொழி களிலும் வல்லுநரென்றே எண்ணிக்கொள்கின்றனர். மொழிநூல்
என்பது பொதுக் கல்வியினின்றும், அல்லது இலக்கிய விலக்கணக் கல்வியினின்றும் வேறான ஒரு
தனிக்கலை என்பதை அவர் சற்றும் உணர்ந்திலர்.
பொதுவாக,
வடமொழிப் பற்றினரெல்லாம் வடமொழி நூல்களிலும் அகராதிகளிலும் உள்ள சொற்களெல்லாம்
வடமொழிச் சொற்களே என்று எண்ணிக்கொள்கின்றனர். உலகத்திலுள்ள பல்வேறு மொழிகளும்
தம்முள் எவ்வளவோ வேறுபாடுடையவேனும், ஒரு மரத்தின் பல்வேறு கிளைகள் ஓர் அடிமரத்தினின்றே
கிளைத்துள்ளது போல, ஒரு மூலமொழியினின்றே கிளைத்துள்ளனவாகும். சில சொற்களிலும், இலக்கண
நெறிமுறைகளிலும் உலக மொழிகளெல்லாம் ஒத்திருப்பதே இதற்குப் போதிய சான்றாம்.
உலகத்திலுள்ள பல்வேறு மக்கட்குலங்களும் ஒருதாய் வயிற்றின என்பது இற்றை
மொழியாராய்ச்சியால் தெரியவருதலின், அவற்றால் பேசப்படும் பல்வேறு மொழிகளும் ஒரு மூலத்தின
என்றே கொள்ளத்தகும்.
ஐயாயிரம்
மைலுக்கப்பாற்பட்ட இலத்தீன், கிரேக்க மொழிகட்கும் தமிழுக்கும் பொதுவான சில சொற்களுள.
எ-டு:
navis (L.)
= நாவாய்.
palios(Gk.) = பழைய.
இரு குலத்தார்
அல்லது நாட்டார் கலந்து அல்லது அடுத்தடுத்து வாழின், சில பொருள்களைத் தமக்குட் கொண்டுங்
கொடுத்தும் மாற்றிக்கொள்வதுபோலச் சில சொற்களையுங் மாற்றிக்கொள்வர்.
|
|
|