பக்கம் எண் :

62பாவாணர் உரைகள்

நாகரிகத்தில் மிகக்குறைந்த காடர்கள் போன்ற மக்கள் இருக்கிறார்கள். இன்னும் அந்தமான் போன்ற தீவுகளில் இன்னும் நாகரிகமடையாத மக்களும் இருக்கிறார்கள். ஆனால் ஏதாவது ஒரு மண்டையோட்டைக் கண்டெடுத்தவுடனே இதுதான் நாகரிக மாந்தனுடையது அல்லது தமிழனுடையது என்கிற முடிவுக்கு நாம் வந்துவிடக் கூடாது; வந்துவிட முடியாது. இப்பொழுது இசையை எடுத்துக் கொள்ளுங்கள். தோற் கருவிகளுக்குள்ளே மிகச் சிறந்தது மத்தளம் என்கின்ற மதங்கம். அஃது ஓர் உயர்ந்த இசையரங்கிலே அடிக்கப் பெறுகிறது. ஆனால் இன்னோர் அரங்கிலே ஒருவன் கஞ்சுரா அடிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அது தோற்கருவிகளுக்குள்ளே தாழ்ந்த கருவி. இந் நிலையில் ஓர் அயல் நாட்டார் அந்தக் கஞ்சுரா அடிக்கின்ற அரங்கத் திற்குப் போய்க் கேட்டார் என்றால், அவர் "இந்தக் காலத்திலே இவர்கள் இப்படிப்பட்ட கருவியைத் தான் வைத்திருக்கிறார்கள்" என்ற முடிவுக்குத் தான் வரமுடியும். அப்படித் தான் ஒவ்வொரு நாட்டிலும், துறையிலும் தாழ்ந்த நிலை, உயர்ந்தநிலை, இடைப்பட்டநிலை என்பனவற்றை யெல்லாம் கவனிக்க வேண்டும்.

நீங்கள் சில வரலாற்று நூல்களைப் பார்ப்பீர்களானால், திரவிடன் என்று ஒரு காட்டு விலங்காண்டி (அஃதாவது மிருகாண்டி - மிராண்டி; மிருகாண்டி என்பது வடசொல்) அல்லது தாழ்ந்த நாகரிகமுள்ள ஒரு சிற்றூர் வாணனைப் படம் பிடித்துக் காட்டியிருப்பார்கள். திரவிடன் என்று சொன்னால் உமாமகேசுவரனார், பவானந்தனார் போன்றோரைப் படம் பிடித்துக் காட்டியிருக்க வேண்டும். நம்முடைய முன்னோரெல்லாம் அவன் காட்டிய தோற்றத்தினராய் இருக்கவில்லை. இவற்றையெல்லாம் கண்ணாரக் கண்டுங்கூட நாம் எதிர்க்காமலேயே இருக்கிறோம். அதனால் தான் நம் பகைவர்கள் மேலும் மேலும் தமிழையும் தமிழனையும் பழித்துக் கொண்டே இருக்கத் துணிந்திருக்கிறார்கள். வெளிநாட்டாரும் அவர்கள் கூறுவதை நம்புவதற்கு இடமுண்டாகி விடுகிறது. எனவே காட்சிப் பொருளளவைக்கு இடமில்லை. ஆகையினால் ஆங்காங்குக் கிடைக்கின்ற சில மண்டையோடுகளாலேயே நாம் அந்த முடிவுக்கு வந்துவிடமுடியாது.

இப்பொழுது, ஐரோப்பாவின் வரலாற்றைப் பார்த்தீர்களானால், நண்ணிலக் கடற்கரை (Mediterranean Region) இருக்கின்றதே, அங்கே யுள்ள மக்களில் கிரேக்கர்களை எடுத்துக் கொள்ளுங்கள்; அவர்களைப் பற்றிய வரலாற்றுப் பொத்தகத்தில் உள்ள படங்களில் பாருங்கள். அவர்கள் சட்டையே அணிந்ததில்லை; கீழ்வேட்டியும் மேல் வேட்டியும் வெவ்வேறு வகையில் அணிந்திருக்கிறார்கள். இந்த நீள் மண்டையர்தாம் அங்கேயும் அந்தக் காலத்தில் இருந்திருக்கின்றார்கள். ஏனென்றால், இங்கிருந்து போனவர்கள் அவர்கள். மேனாட்டு வரலாற்றாசிரியர்கள் மிகப் பழைய நாகரிகமாக ஒரே காலத்தில் இரண்டு நாகரிகங்களைக் காட்டுகின்றார்கள்; எகிப்து ஒன்று; சுமேரிய நாகரிகம் ஒன்று. சுமேரிய நாகரிகத்திற்குப்