பக்கம் எண் :

மேலை மொழிநூலாரின் மேலோட்டக் கொள்கைகள் 77

     "எல்லாச் சொல்லும் பொருள்குறித் தனவே."(பெய. 1)
என்று தொல்காப்பியம் தெரிவிக்கின்றது. ஆயினும், தமிழிலும், எல்லாச்
சொல்லும் கண்டமட்டில் அல்லது கேட்டமட்டில் வேர்ப்பொரு ளுணர்த்து
வன அல்ல. பல சொற்களை ஆழ்ந் தகழ்ந்தாராய்ந்தே, அவற்றின் வேர்ச்
சொல்லையும் மூலப்பொருளையும் அறிதல் கூடும். அதனால்

     "மொழிப்பொருட் காரணம் விழிப்பத் தோன்றா" (உரி. 96)
என்று தொல்காப்பியமே கூறுகின்றது.

     சொற்கள், ஒரு பொருட்சொல் என்றும், பல்பொருட்சொல் என்றும்,
பொருளுணர்த்தும் வகையில் இருவகைப் பட்டுள்ளன. பல்பொருட்
சொல்லும், ஒரு வேர்ச்சொல் என்றும், பல்வேர்ச் சொல் என்றும், இருதிறப்
பட்டுள்ளன. ஆதலால், வடிவொப்புமையொன்றே நோக்கிப் பல்வேர்ச்
சொல்லை ஒருவேர்ச் சொல்லென்று மயங்குதல் தவறாம்.

     எடுத்துக்காட்டாக, வெள் என்னும் இயற்சொல்லை எடுத்துக்
கொள்ளலாம். இது வெப்பம், வெண்ணிறம், வெறுமை, விருப்பம் முதலிய
பல்பொருளுணர்த்துவது. அவற்றுள், வெப்பமும் விருப்பமும், நம்நாட்டுத்
தட்பவெப்ப நிலையும் அதன் விளைவாக எழும் மக்கட் கருத்தும் நோக்கின்,
ஒன்றோடொன்று முரண்பட்டனவாகும்.

     நம்நாடு பொதுவாக வெப்பநாடா யிருப்பினும், கோடைக்காலத்திற்
குளிர்ந்த குடிப்பையும் மாரிக்காலத்தில் வெப்பக் குடிப்பையும்
விரும்புகின்றோம். சம தட்பவெப்ப நாடுகளிலும் மிகு தட்ப நாடுகளிலும்
என்றும் குளிர்ந்திருப்பதால், அந் நாடுகளிலுள்ள மக்கள் வெப்பத்தை
விரும்புவது இயல்பே. அதனால், தியாகராசப் பாடகர் பாட்டைச்
செவிகுளிரக் கேட்டு இன்புற்றேன் என்று நமர் சொல்வது போன்று,
அமெரிக்க நாட்டுத் தலைவர்க்குச் செருமனியில் வெதுவெதுப்பான (warm)
வரவேற்பிருந்தது என்று குளிர்நாட்டார் கூறக் கேட்கின்றோம்.

     தமிழில் வெம்மை என்னும் சொல்லிற்கு வெப்பம், விருப்பம் என்னும்
இருபொருளும் உள்ளன.

     "உருமமும் கருமமும் உருப்பமும் வெப்பமும்
     அழனமும் கோரமும் அழலும் வெம்மை"(7 : 105)

என்பது பிங்கலம்.

     "வெம்மை வேண்டல்". (தொல். உரி. 36)

     வெள் - வெட்டை = 1. வெப்பம். "அனல் வெட்டையாற் சுருண்டு"
(இராமநா. யுத். 14) 2. நிலக்கொதி (W.). 3. காமச்சூடு. "காம வெட்டை
யிலே மதிமயங்கி" (தனிப்பா.) வெட்டைச்சூடு என்பது பெருவழக்கு.

தெ. வெட்ட, க. வெட்டெ.