பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்41

   "இன்கடுங்கள்" (புறம்.80) என்பதனாலும், "பூக்கமழ் தேறல்" (பொருந. 157) என்பதனாலும், செயற்கைக் கள் இனிமையும் மணமும் ஊட்டப் பெற்றிருந்தமை அறியலாம்.

   நாட்படாத இயற்கைக் கள்ளை உடலுழைப்பாளிகள் வெறி யுண்டாகாவாறு அளவாக உண்பதாற் கேடில்லை யென்பதும் நன்றென்பதும், ஆராய்ச்சியாளர் கருத்து. வேனிற் காலத்திற்குக் குளிர்ச்சியான பனங்கள்ளையும் மாரிக் காலத்திற்கு வெப்பமான தென்னங்கள்ளையும், இயற்கை வகுத்திருப்பது கவனிக்கத் தக்கது.
 

4. உடை
 

   தமிழகத்திற் பழங்காலத்திலேயே நெசவு தோன்றிவிட்டதென ஆராய்ச்சியாளர் கூறுகின்றனர். வயவர் யோவான் மார்சல் (Sir John Marshall) தம்மொகெஞ்சோ-தாரோவும் சிந்து நாகரிகமும் (Mohenjo-Daro and the Indus Civilization) என்னும் நூலில் கி.மு.3000 ஆண்டுகட்கு முன் மேனாடுகட்கு இந்தியாவினின்றே துணி ஏற்றுமதியான தென்று கூறியிருக்கின்றார். அக்காலத் திந்தியா தமிழகமே.

   பருத்தி தொன்றுதொட்டுத் தென்னாட்டில் விளைந்து வருகின்றது. மூதாட்டியரும் கைம்பெண்டிரும் பண்டைக் காலத் தில் மேற்கொண்ட தொழில்களுள் பெருவழக்கானது நூல்நூற்றல். அதனால் அவர் பருத்திப் பெண்டிர் எனப்பட்டார்.

"பருத்திப் பெண்டிர் பனுவ லன்ன" (புறம். 125:1)
"ஆளில பெண்டிர் தாளிற் செய்த
 நுணங்குநுண் பனுவல்"
(நற். 353) 
"பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்
 செஞ்சொற் புலவனே சேயிழையா-எஞ்சாத
 கையேவா யாகக் கதிரே மதியாக
 மையிலா நூன்முடியு மாறு"
(நன்.பாயிரம்)
 பனுவல் = நூல்

   "நூற்பதற்குப் பஞ்சைச் சுருளாகத் திரட்டி வைப்பதனால், நூல் நூற்றலைக் கொட்டை நூற்றல் என்பது வழக்கு. நூற்குங் கருவி, சுற்றும் சக்கரமுடைமையால் இறாட்டு அல்லது இறாட்டை எனப்பட்டது.

இறத்தல் = வளைதல், இறகு = வளைந்த தூவு.

   இறவு = கூரையின் சாய்ப்பு, இற - இறப்பு = கூரையின் சாய்ப்பு. இது இறவாணம், இறவாரம் என்றும் சொல்லப்படும். இறவு - இறவுள் = மலைச்சரிவு.