பக்கம் எண் :

பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்53

காரைவீடுகள் உச்சியில் ஓடு வேய்ந்ததும் மச்சுப் பாவியும் இருவகையா யிருந்தன. ஓடும் இலக்கிய வழக்கில் சுடுமண் எனப் பட்டது.

"சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின்
முடியர சொடுங்கும் கடிமனை"
(சிலப்.14:146-7)

என்பதற்கு ஓடு வேயாது பொற்றகடு வேய்ந்த மனை என்று அருஞ்சொல்லுரைகாரர் ஓர் உரை வரைந்திருப்பது கவனிக்கத் தக்கது. முடிவேந்தரும் விரும்பும் நாடகக் கணிகையர் மனைகளா தலின். பொற்றகடு வேய்ந்ததாகவும் இருந்திருக்கலாம். காஞ்சிநகரிற் பலர் கூடுதற்குரிய பொது அம்பலமும் பொன்னால் வேயப்பட் டிருந்ததாக மணிமேகலை கூறுதல் காண்க.

"சாலையுங் கூடமும் தமனியப் பொதியிலும்" (மணிமே. 28: 66)
"மழைதோயும் உயர்மாடத்து" (145)

என்னும் பட்டினப்பாலையடியும்,

"மாடம் அழிந்தக்கால் மற்றும் எடுப்பதோர்
கூடம் மரத்திற்குத் துப்பாகும்."
(பழ. 71)

என்னும் பழமொழிச் செய்யுளும் மாடத்தின் பெருமையை உணர்த்தும்.

7. ஊர்தியும் போக்குவரத்தும்

  ஊர்தல் ஏறிச் செல்லுதல், ஊர்தி ஏறிச் செல்லுங் கருவி.

  நிலவூர்திகள் அணிகம் வண்டி, விலங்கு என மூவகைப்படும்.

  அணிகம், சிவிகை, பல்லக்கு, மேனா, சப்பரம் என்பன.

  சிவிகை, இருவர் காவிச் செல்லும் கூண்டுப் பல்லக்கு. பல்லக்கு எண்மருக்குக் குறையாது தோளில் தாங்கிச் செல்லும் திறந்த தண்டையப் படைப் பல்லக்கு. சப்பரம் உருளியின்றி ஒற்றைத்தட் டுள்ள சப்பை (மொட்டை)த் தேர்.

  சிவிகை என்பது சிபிக்கா என்றும், பல்லக்கு என்பது பர்யங்க என்றும், வடமொழியில் திரியும். சப்பரம் இன்று தெய்வப் படிமையைக் கொண்டு செல்லவே பயன்படுத்தப் பெறும்.

  வண்டி: சகடம், கூடாரப்பண்டி, கொல்லாப் பண்டி, வையம், பாண்டில், வங்கம், தேர் என்பன. சகடம் பொதுவகையான மாட்டு வண்டி; கூடாரப் பண்டி கூண்டு வண்டி; கொல்லாப் பண்டி சிறந்த காளைகள் பூட்டப் பெற்றதும் பெருமக்கள் ஏறிச் செல்வதுமான நாகரிகக் கூண்டுவண்டி; வையம் இரு குதிரை பூண்டிழுக்கும் தேர்