பக்கம் எண் :

8பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும்

பண்டைக் காலத்தில், நாகரிகம் என்னும் சொல்லையே பண்பாடென்னும் பொருளிலும் ஆண்டனர். அதனாலேயே, பண் பாட்டுக் குணமான கண்ணோட்டத்தை நாகரிகம் என்றார் திருவள்ளுவர்.

"பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க
 நாகரிகம் வேண்டு பவர்"
(குறள். 580)

  திருந்திய நிலை என்னும் பொதுக் கருத்தில், நாகரிகமும் பண்பாடும் ஒன்றாதல் காண்க.
பண்பாடு நாகரிகத்தினும் சிறந்ததாயினும், நாட்டிலும் நகரிலும் கூட்டு வாழ்க்கையில் வாழ்பவர் நாகரிகமின்றி யிருத்தல் கூடாது. கூட்டு வாழ்க்கையில் நாகரிகமின்றி யிருப்பவர்க்குப் பண்பாடும் இருத்தல் முடியாது. ஊரிலிருப்பவர் உலகப்பற்றை நீத்தவரேனும், உடல் நீங்கும்வரை நீர்ச்சீலையாவது அணிதல் வேண்டும்.


4. இந்திய நாகரிகம் தமிழரதே யாதல்
 

  வேத ஆரியர் மேலையாசியாவினின்று இந்தியாவிற்குட் புகுந்த காலம் கி.மு. 2000 - 1500. அன்று அவர் கன்றுகாலிகளை ஓட்டித் திரியும் நாடோடிகளாயும், முல்லை நாகரிக நிலையின ராயுமே யிருந்தனர். அவருக்கு இலக்கியமுமில்லை; எழுத்துமில்லை. அவர் பேசிய மொழி கிரேக்கத்திற்கு இனமாயும் பழம்பாரசீகத்திற்கு மிக நெருங்கியதாயும் சொல்வளமற்றதாயும் இருந்தது. இந்தியாவிற் காலூன்றிய பின்னரே, அவர் இருக்கு என்னும் தம் முதல் வேதத்தை யாத்தனர். அவ் வேதமொழி வடஇந்தியப் பிராகிருதத்தையும் திரவிடத்தையும் தழுவியதென்பது அதில் எகர ஒகரக் குறிலின்மையாலும் பல தமிழ்ச்சொற்க ளுண்மையாலும் தெரியவருகின்றது.

  தமிழின் தொன்மையையும் முன்மையையும் அறியாத வரலாற்றாசிரியர், ஆரிய வேதக்காலத்தையே அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாட்டு வரலாற்றைத் தொடங்கும் தவறான வழக்கம் இன்னும் இருந்துவருகின்றது. தமிழ் வேத ஆரியத்திற்கு முந்தியதா யிருப்பதோடு வேதப் பெயர்களே தமிழ்ச்சொற்களின் திரிபாகவு மிருக்கின்றன.


வேதம் : விழித்தல் = பார்த்தல், காணுதல், அறிதல்.
விழி = அறிவு, ஓதி (ஞானம்).
"தேறார் விழியிலா மாந்தர்" (திருமந். 177)
விழி -
L. vide - vise; Skt. vid - veda
ஒ.நோ: குழல் - குடல்; ஒடி - ஒசி.