|
கூற்று :
தொல்காப்பியம் எழுத்ததிகாரம்
ஐ. நூன்மரபு ஒலியன்களின் பட்டி, அவற்றின்
பாகுபாடு ''தொல்காப்பியத்தின் முதற்பாகம்
எழுத்ததிகாரம் எனப்படும். அதன் முதற்பிரிவு நூன்மரபு, அதாவது தமிழிலக்கண நூல்களின்
மரபு எனப்படும். தொல்காப்பியர் முதற்கண் எழுத்ததிகாரத்தையே இயற்றினா ரென்றும்,
அதனால் நூல் என்பது எழுத்ததிகாரத்தையே குறிக்குமென்றும், ஒரு கருத்தைத்
தெரிவித்திருக்கின்றேன். நூன்மரபு தமிழ் ஒலிகளையும் அவற்றின் பாகுபாட்டையும்
மெய்ம்மயக்கங்களையும் எடுத்துக் கூறுகின்றது. அவை யாவும் எழுத்தையே குறிக்கின்றன.
கண்டுள்ள விளக்கங் களும் இயல்வரையறைகளும் பெரும்பாலும் அக்காலத்து வழக்கிலிருந்த
நெடுங்கணக்கொலிகளின் வரிசை முறையைத் தழுவியுள்ளன. அகரத்தில் தொடங்கி னகரத்தில்
முடியும் முதலெழுத்துகள் முப்பது; அவை இயற்கையாக நெடுங்கணக்கு முறையைக் குறிக்கின்றன.
மீண்டும் அவர் (நெடுங் கணக்கில்) 'ஒள'வொடு முடியும் பன்னீரொலிகளை உயிர் என்றும்,
அவற் றுக்குப் பின் வந்து 'ன'வ்வொடு முடியும் பதினெட்டை மெய் என்றும் கூறுகின்றார்.
அதன்பின் வெவ்வேறொலிகளின் அளபு தொடர்கின்றது. அவ்வடிப்படையில், ஒரு
மாத்திரையுள்ள உயிர் குறில் என்றும், இருமாத்திரையுள்ள உயிர் நெடில் என்றும் பாகுபாடு
செய்யப்படுகின்றது. மெய் யெழுத்தின் மாத்திரை அரை.''
மறுப்பு வடமொழியெழுத்துகள்
மொத்தம் 48 என்றும், 52 என்றும், 53 என்றும், பிறவாறும் இலக்கண நூலாசிரியரிடைக்
கருத்துவேறுபாடிருந்து வருவது போன்று, தமிழிலும் சார்பெழுத்துப்பற்றிக் கருத்துவேறுபாடு
தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கின்றது.
தொல்காப்பியர் சார்பெழுத்து மூன்றென்றார். அது
முன்னூல்களைத் தழுவியது. பவணந்தியார் சார்பெழுத்துப் பத்தென்றார். இவ் விருவர்க்கும்
இடைப்பட்ட அமிதசாகரனார், ''சார்பிற் றோன்றுந் தன்மைய வென்றா'' என்று தொகை
குறியாது கூறினும், அதன் உரையாசிரியர்,
''அவைதாம்
குற்றிய லிகரம் குற்றிய லுகரம் ஆய்தம்
என்ற முப்பாற் புள்ளியும் எழுத்தோ
ரன்ன'' என்னுந் தொல்காப்பிய நூற்பாவை யொட்டிய,
''குற்றிய லிகரம் குற்றிய
லுகரம் ஆய்தப் புள்ளி யென்றிவை
மூன்றும் சார்பிற் றோற்றத் துரிமையி
னுளவே'' |