1. ''8ஆம் நூற்றாண்டிற்கும் 13ஆம் நூற்றாண்டிற்கும் இடையில் வீணை என்னும்
பெயர் யாழிசையோடு கூடிய மிடற்றிசையையே குறித்த தாயின், வீணை வாசிப்பின்
செயல்முறையும் அதுபற்றிய இடக்கை வலக்கைத் தொழில் வேறுபாடுகளைக் குறிக்கும் மிகப்
பலவாகிய குறியீடுகளும் பொய்யாய்ப் போம்.''
இப்போது வீணையென வழங்கும் கருவி 8ஆம்
நூற்றாண்டிற்கும் 13ஆம் நூற்றாண்டிற்கும் இடையில்
தமிழ்நாட்டிலிருக்கத்தான் செய்தது. ஆனால், அது தொன்றுதொட்ட முறைப்படி யாழ்
என்னும் தமிழ்ப் பெய ராலும் சிறுபான்மை வீணை என்னும் வடமொழிப் பெயராலும் அழைக்கப்
பெற்றது. இவ் வடமொழிப் பெயர் கடைச்சங்க கால இறுதியில்தான் தமிழ்நாட்டிற்
புகுத்தப்பட்டது. அதற்குமுன் வடசொற்கள் தமிழில் மிக அருகியே வழங்கின. வடசொல்லே
கலவாத தனித்தமிழ் வழங்கிய காலமுமுண்டு. அது ஆரியர் தென்னாட்டிற்கு
வருமுன்னதாகும்.
வீணை என்னும் பெயர் தனித்து வரும்போது,
செங்கோட்டி யாழையே அல்லது பிற யாழையே குறிக்கும்.
''மங்கல மிழப்ப வீணை
மண்மிசை'' என்று இளங்கோவடிகளும், ''மாசில் வீணையும்
மாலை மதியமும்'' என்று திருநாவுக்கரசரும், ''குழலி
னோசை வீணை மொந்தை கொட்ட முழவதிர'' என்று திருஞான சம்பந்தரும் கூறுதல்
காண்க.
சிந்தாமணியில், கந்தருவதத்தையா
ரிலம்பகத்தில், யாழ் என்னும் பெயரும் வீணை என்னும் பெயரும் ஒருபொருட் கிளவியாய்
ஒன்றுக் கொன்று பதிலாக வருகின்றன. தேவாரத்தில் யாழ் என்னும் பெயர் வருமிடத்தில்
வீணை என்னும் பெயரும், வீணை என்னும் பெயர் வருமிடத்தில் யாழ் என்னும் பெயரும்
விலக்கப்பட்டன. நாரதயாழ் நாரதவீணை என ஒரே கருவி குறித்து இருபெயர்
வழக்குமுள்ளது.
வீணை என்னும் பெயர், யாழ் என்னும்
பெயரோடு கூடி வருமிடத் தில் மட்டும், தனி மிடற்றிசையையோ யாழிசையொடு கூடிய
மிடற்றிசை யையோ குறிக்கும். இதற்குச் சிந்தாமணி மூலத்தின் உரையினின்றும் 'பாணர்
கைவழி'யாசிரியரால் போதிய சான்றுகள் தரப்பட்டுள்ளன.
யாழ் என்னும் சொல்லும், பொதுப்பட்ட
இசையையும் இசைப் பகுதியான பண்ணையும் இசைக்கருவியான யாழையும், இடத்திற்கேற்பக்
குறிக்கும். |