பக்கம் எண் :

8மறுப்புரை மாண்பு

-8-
 

2. குரல் சட்சமே; மத்திமமன்று 

 

சுரவிடங்களையும் குரல்தானம் துத்தத்தானம் என இசைபற்றியும், முதற்றானம் இரண்டாந்தானம் என முறைபற்றியும் இருமுறையாய்க் கூறுவதற் கேற்கும். ஏழிசைத் தொடரான ஒரு நிலைக்குத் தானம் என்னும் பெயரிருப்பினும், உரையாசிரியர் ''முதற்றானத்திற்குரிய குரல்'' என்று வேற்றுமைத் தொடராகக் கூறாமல் ''முதற்றானமாகிய குரல்'' என்று பண்புத் தொடராகக் கூறியிருத்தலால், தானம் என்னும் பெயர் இங்கு நிலையைக் குறிக்காமல் இசையைக் குறிக்குமென்று கொள்வதே பொருத்தமானதாம்.

    8. கேள்விச்சுரம் எந்தச் சுரமாகவு மிருக்கலாம் என்கிறார் நம் நண்பர். ஓர் இடத்தை அதைச் சூழ்ந்துள்ள பலபொருள் நோக்கி எத்திசையாகவுங் கூறலாம். ஆனால், பொதுவாக நம்மை நோக்கி ஓர் இடத்தை இன்ன திசை யென்று கூறுதலே மரபு. அதுபோல, எந்தச் சுரத்தையுங் கேள்வியாகக் கொள்வதற் கேற்குமேனும் ஒன்றைக் கேள்விச் சுரமாகக்  கொண்ட பிறகு அதைக் குரலென்று கொள்வதே மரபாம்.

    9. குரல் என்னும் சொல் இயற்றமிழில் ஏழிசைக்கும் பொதுவான ஓசையையே குறிக்குமேனும், இசைத்தமிழில் அவ்வப்போது தொண் டைக்கு இயல்பாயுள்ள கேள்விச் சுரமாகிய குரலோசையைக் குறிக்கு மென்று கொள்வதல்லது, இயல்புக்கு மாறாய் ஏற்றியும் இறக்கியும் ஒலிக்கும் பிற திரிபு (விகார)  இசைகளைக் குறிக்குமென்று  கொள்வது பொருந்தாது.

    10. கருணாமிர்த சாகரத்தில் இருப்பனவாக யான் கூறிய இரண்டொரு சிறு சருக்கல்கள் பெரும்பாலும் சரித்திரமும் சொற்பிறப்பியலும் பற்றியவை யாதலால், என் கூற்றைப் பிறழக் கொண்டு தமது தவற்றுக் கொள்கைக்குத் துணையளிப்பதாக நம் நண்பர் கருதி மகிழற்க.

    11. ஏழிசை அலகுகள் மொத்தம் 24 என்றே என் இசையாசிரியர் காலஞ்சென்ற மன்னார்குடி யாழ்ப்புலவர் இராசகோபால  ஐயரவர்கள் எடுத்துக் கூறினார்கள். இதை (அண்மையில் 20 ஆண்டுகட்குமுன்) மேனாட்டார் கண்டுபிடிப்பும் வலியுறுத்துகிறது. நம் முன்னோர் கருவி யில்லாமல் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டுபிடித்தவற்றையே மேனாட்டார் இன்று கருவியினால்  கண்டுபிடித்துள்ளனர். இதற்கு வானூ லும் சான்று பகரும். தமிழ்நூலை வடமொழியில், மொழிபெயர்க்கும்போது இயன்றவரை திரித்தெழுதுவது வடநூலார் வழக்கம். இதைப் பூர்வீக சங்கீத உண்மை என்னும் நூலிற் கண்டு தெளிக. பிற்காலத் தமிழ் நூற்பாக்களிற் சில, வடமொழி வழூஉ நூற்பாக்களின்  மொழிபெயர்ப்பாகவு மிருக்கலாம். ஆலாபன இசையை அல்லது பண்களை இந்தியாவில் முதன்முதல் பாடியவர் தமிழரே யென்பதையும் அது பண்டைக்காலத்தில் எழுத் துச்சரிப்பை அணுவும் பிறழவிடாத ஆரியவேத மந்திரத்திற்கும் ஆரியப் பார்ப்பனருக்கும் விலக்கப்பட்டிருந்தது என்பதையும் அறிதல் வேண்டும்.