பக்கம் எண் :

72வேர்ச்சொற் கட்டுரைகள்

     முரு-முறு-முறுகு. முறுகுதல் = (செ.கு.வி.) 1. திருகுதல் (பிங்). 2. விரைதல். "முறுகிய விசையிற் றாகி" (சீவக. 796). 3. முதிர்தல். "கனிமுறுகி விண்டென" (சூளா.சீய. 7). 4. மிகுதல். "வேட்கையின் முறுகி யூர்தர" (சீவக. 1183). 5. கடுமையாதல். "வெயின் முறுக" (நாலடி.171). 6.காந்திப்போதல். 7.செருக்குதல். "வரையெடுக்க லுற்று முறுகினான்" (தேவா. 289 : 10).
     (செ. குன்றாவி.) மீறுதல் (பிங்.).
     ம. முறுகு.
     முறுகு-முறுகல் = 1. திருகல். திருகல் முறுகல், பிரண்டைபோலத் திருகல் முறுகலானது (உ.வ.). 2. மிகுதியாக வெந்தது. தோசை யொன்று முறுகலாகப் போடு (உ.வ.).
     முறுகு-முறுக்கு. முறுக்குதல் = (செ. குன்றாவி.) 1. கயிறு முதலியன திரித்தல். "வாய்மடித் திரண்டு கையு முறுக்கி" (கம்பரா. மருத்து. 10). 2. முறுக்காணியைத் திருகுதல். 3. மிகைபட முறுக்கியொடித்தல். "பிடிபடி முறுக்கிய பெருமரப் பூசல்" (அகம். 8). 4. சுழற்றுதல். "முறுக்கிவிட்ட குயமகன் றிகிரிபோல" (சீவக.786). 5. வெற்றிலை சுருட்டி யுண்ணுதல். (நாஞ்.). 6. கை கால்களைப் பிசைந்து தேய்த்தல் (w.)
     (செ. கு. வி.). 1. செருக்குதல். 2. மாறுபடுதல். 3. சினத்தல் (யாழ். அக.).
     ம., க. முருக்கு, தெ. முரக்கட்டு.
     முறுக்கு = 1. திரிக்கை. 2. திருகாணிச் சுற்று. 3. முறுக்கிச் சுட்ட பலகாரம். "அடைமுறுக்கு" (விநாயகபு. 39 : 39). 4. இதழ் முறுக்குள்ள அரும்பு. "முறுக்கு டைந்தலர் மலர்களும்" (காஞ்சிப்பு. திருக்கண். 180). 5. நூலுருண்டை. 6. வலிப்பு (இலக். அக). 7. நெறிப்பு (w). 8. கடுமை (இலக். அக). 9. மாறுபாடு (W). 10. செருக்கு. 11. மிடுக்கு. "கிழமாய் நரைத்து முகந்திரைந்து மிந்த முறுக்கேன்" (தனிப்பா. I, 88 : 173).
     முறுக்கு-முறுக்கம் = 1. திருகல். 2. முடுக்கு. 3. கடுமை.
     முறுக்கு-முறுக்கி = முறுக்குங் கருவி.
     வில்லை முறுக்கி = ஒரு கருவி (Spanner).
முறுக்கவரை, முறுக்காணி, முறுக்குமீசை, முறுக்கு வட்டம், முறுக்கு விரியன் முதலிய கூட்டுச் சொற்கள் முறுக்கவியல் பற்றியன.
முறுக்கு-முறுக்கான் = 1. முறுக்கிய புகையிலை. 2. புகையிலையுடன் போட்டுக்கொள்ளும் தாம்பூலம் (நாஞ்.).
     ம. முறுக்கான்.
     முறு-முற்று. முற்றுதல் = 1. சூழ்தல். "பாண்முற் றுகநின் னாண்மகிழிருக்கை" (புறம். 29). 2. கோட்டையைச் சூழ்ந்து பொருதல். "முற்றிய வகத்தோன் வீழ்ந்த நொச்சியும்" (தொல். புறத். 13).