திருப்பதிகம் பாடினார். அவர் பாட்டில் கங்கை கொண்ட சோழேச்சரம்
என்று அக்கோவில்
குறிக்கப்படுகின்றது.6 கோவிலுக்கு அரைமைல் தூரத்தில்
சோழ மன்னனது மாளிகை எழுந்தது. இன்னும்,
வேளாண்மைக்கு
இன்றியமையாத நீர் வளத்தைப் பெருக்குமாறு சோழன் அந்நகரில் பெரிய
ஏரி
ஒன்று கட்டினான். கங்கை யாற்றினின்றும் எடுத்து வந்த நீரை
அவ்வேரியில் உகுத்துச் சோழகங்கம்
என்று அதற்குப் பெயரிட்டான்.
இவ்வாறு கங்கை கொண்ட சோழன் கண்ணெனக் கருதி வளர்த்த
பெரு நகரம் இக் காலத்தில்
உருக்குலைந்து பாழ்பட்டுக் கிடக்கின்றது.
சிவாலயம் சிதைந்துவிட்டது. பெரிய ஏரி பேணுவாரற்றுத்
தூர்ந்து போயிற்று.
அரண்மனை இருந்த இடம் மாளிகைமேடு என்ற அழைக்கப்படுகின்றது.
நீரற்ற
ஏரி பொன்னேரி என்று குறிக்கப்படுகின்றது. அந் நகரின் பெயரும்
குறுகிக் கங்கை கொண்ட
புரம் ஆயிற்று. தஞ்சைச் சோழர் ஆட்சியில் அந்
நகரம் எய்தியிருந்த பெருமை எல்லாம்
கனவிற் கண்ட காட்சி யெனக்
கழிந்தது.
வஞ்சி
இனிச் சேர நாட்டுத் தலைநகராக முன்னாளில் விளங்கிய வஞ்சி
மாநகரம் சிலப்பதிகாரம் முதலிய
பழந்தமிழ் நூல்களில் மிகச் சிறப்பாகப்
பேசப்படுகின்றது. செங்குட்டுவன் என்னும் சேரன், வடநாட்டு மன்னரை
வென்று, பெரும் புகழ் பெற்று, வீரமாபத்தினியாய
கண்ணகிக்கு வஞ்சி
மாநகரத்தில்
கோவில் அமைத்து வழிபட்டபோது பிறநாட்டு மன்னரும்
அந்நகரிற் போந்து கற்புக்
கடவுளின் அருள் பெற்றனர்
என்று
இளங்கோவடிகள் கூறுகின்றார். |