பக்கம் எண் :


தமிழகம்

கடவுள் வணக்கம்

"அரியசடை முடிபோற்றி யருள்பொழிசெம் முகம்போற்றி
விரையிதழி மலரணிநூல் விளங்கியமார் பகம்போற்றி
மருவுமுயர் பேரழகு வளருதர நிலைபோற்றி
திருவளர்செந் தமிழ்ச்சொக்கன் திருவடித்தா மரைபோற்றி."
"தவளத் தாமரைத் தாதார் கோயில்
அவளைப் போற்றுதும் அருந்தமிழ் குறித்தே."

தமிழ்த் தெய்வ வணக்கம்

"மறைமுதற் கிளந்த வாயான் மதிமுகிழ் முடித்த வேணி
இறைவர்தம் பெயரை நாட்டி இலக்கணஞ் செய்யப் பெற்றே
அறைகடல் வரைப்பிற் பாடை யனைத்தும்வென் றாரியத்தோ
டுறழ்தரு தமிழ்த்தெய்வத்தை யுண்ணினைந் தேத்தல் செய்வாம்."

 -சீகாளத்திப் புராணம்.

"பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினும்ஓர்
எல்லையறு பரம்பொருள்முன் னிருந்தபடி யிருப்பதுபோல்
கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் துதித்தெழுந்தே யொன்றுபல ஆயிடினும்
ஆரியம்போலுலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே."

 -மனோன்மணீயம்.