சிந்து ஆற்றுவழியாகக் கடலிலிருந்து கொண்டுவந்த மீன்கள் நாள்தோறும் சிந்துவெளி மக்களின் உணவு மேடையில் வந்து காத்திருக்கின்றன. 'வரலாற்றில் நிகழ்ந்தவை' என்ற கவர்ச்சிகரமான பெயருடைய ஏட்டில் 1கார்டன்சைல்டு என்ற ஆசிரியர்தரும் விவரங்கள் இவை. |
சிந்துவெளி நாகரிகத்தின் வியத்தகு கூறுகளைத் தொகுத்து 2நான் புதிதாகக் 'கண்ட இந்தியா' என்ற நூலில் இந்தியக் கூட்டுறவின் தொடக்க முதல்வரான பண்டித ஜவஹர்லால் நேரு கூறுவதாவது:. சிந்துவெளிநாகரிகம் மிகவும் உயர் சிறப்புடையது. அந்நிலையை அது அடையப் பல்லாயிர ஆண்டுகள் சென்றிருக்க வேண்டும், என்பதில் ஐயமில்லை. இதில் மிகவும் வியப்புக்குரிய செய்தி ஒன்று உண்டு. அது யாதெனில், இந்நாகரிகம் முற்றிலும் சமயச்சார்பு அற்றதாக இருப்பதுதான். சிந்து வெளியில் சமய வாழ்வு இல்லை என்று இதனால் ஏற்படாது. ஆனால் அது மக்கள் வாழ்வில் ஒரு கூறாக இருந்தது. இன்றைய கீழ்நாட்டுச் சமய வாழ்வைப்போல அது அவ்வாழ்வையே விழுங்கி வளர்வதாயில்லை. அத்துடன் சமயத்துறையில் மட்டுமன்றி, எல்லாத் துறைகளிலுமே, அது இந்நாட்டு நாகரிகத்தின் மூலக் கருமுதல் ஆகும். |
சிந்துவெளி நாகரிகம் வெளி உலகுடன் நெருங்கிய தொடர்பும் ஒப்புமையும் உடையது. ஆனால் அது வெளிஉலகிலிருந்து வந்த நாகரிகம் அன்று. ஏனெனில் அது வெளி உலகிலுள்ள மற்ற எல்லாத் தொல்பழங்கால நாகரிகங்களுக்கும் முற்பட்டு, அவை எல்லாவற்றையும்விடப் பல வகையில் சிறந்ததாயிருந்தது. அத்துடன் அதன் பல கூறுகளும் கீழ்த்திசை வாழ்வுடன் இரண்டறக் கலந்ததாகவும், அதன் மூலதளமான தென்னாட்டு வாழ்வுடன் தனிச் சிறப்பான தொடர்புகள் உடையதாகவும் இருக்கிறது. |
|
1 Gordon Child 2 Discovery of India by Pandit Jawaharlal Nehru |