பொருதழிந்து மீளவும் பூங்கழலான் மீளான் ஒருதனியே நின்றா னுளன். (இ - ள்.) விளைவறியாத பிள்ளையையொப்பப் பிணம் பெருக்க வீரரை வெட்டி வெட்சியார் கொள்ளைகொண்ட ஆனிரையைக் கிட்டினார் இகழ்ந்து பூசற்செய்து கெட்டு மீண்டுபோகவும் மீளானாகித் தனியே நின்றான் ஒரு பூங்கழலானுளன். எ - று. (7) 29. பிள்ளைத் தெளிவு கண்மகிழ்ந்து துடிவிம்மப் புண்மகிழ்ந்து புகன்றாடின்று. (இ - ள்.) துடியின்கண் மகிழ்ந்தொலிப்பத் தன்புண்ணைப் பிரியப்பட்டு விரும்பிக் கூத்தாடியது. எ - று. அதனைப் புகழ்ந்தாடியதூஉமாம். வ - று. மேவா ருயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் பூவா ளுறைகழியாப் போர்க்களத் - தோவான் 1துடியிரட்டி விம்மத் தொடுகழலார் முன்னின் றடியிரட்டித் திட்டாடு மாட்டு. (இ - ள்.) பகைவர் உயிருலரத் தலையினை நீக்கிக் கவந்தமாக்கி நின்ற பிள்ளைத்தன்மையை எய்தியவன் பொலிவினையுடைய வாளினை உறையினின்றும் வாங்கிப் பூசற்களரியிலேயொழியான் துடிகொட்டி ஆர்ப்பரவ மிகக் கட்டிய வீரக்கழலினையுடையார் முன்னே நின்று இட்ட? வடியின்மேல் அடியிட்டு ஆடுங்கூத்து. எ - று. ஆட்டு ஓவானென்க. எ - று. (8) 30. பிள்ளை யாட்டு கூடலர்குடர் மாலைசூட்டி வேறிரித்து விரும்பியாடின்று. இ - ள். பகைவர்குடராகிய மாலையைச் சூட்டிக் கையிலே வேலைத்திருப்பிப் பிரியப்பட்டு ஆடியது எ - று. வ - று.1மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய வெஃகங் குடர்மாலை - சூட்டியபின் மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட வேறிரிய விம்முந் துடி. (இ - ள்.) பகைவரை மாளப்பண்ணின பிள்ளைத்தன்மையை எய்தியவன், வீரருடைய மார்பங்களைத் திறந்து தெரிந்து பறித்தவேலைப் பகைவருடைய குடர்மாலையைச் சுற்றியபின் மாறுபாடு கெடக்கோபித்து ஆடுமவன் கைக்கொண்ட வேலைத் திருப்பக் கறங்கா நின்றது துடி எ - று. (9)
1. தொல். புறத். சூ. 5, இளம்.மேற். (பி-ம்.) 2. 'துடியு ருட்டி விம்ம' |