பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

9

‘உல்’ என்னும் வேர்ச்சொல்

உல்2 (வளைதற் கருத்து வேர்)

உல் - உலம் = 1. உருண்டு திரண்ட கல். “உலஞ்செய்த.... தோளான்” (சீவக. 2915). 2. திரட்சி. “உலங்கொள் சங்கத் தார்கலி” (தேவா. 112 8).

உலம் - உலவு. உலவுதல் = 1. சுற்றுதல். 2. திரிதல். 3. உலாவுதல். “ஒருங்குதிரை யுலவுசடை” (திருவாச. 38 1).

உலவு - உரவு. உரவுதல் = உலாவுதல். “உரவுநீ ரழுவத் தோடு கலம்” (பெரும்பாண். 350).

உல் - உல - உலக்கை = 1. உரலிற் கூலம் முதலியன குற்றும் உருண்டு நீண்ட கருவி. “மிளகெறி யுலக்கையின்” (பதிற். 41). 2. ஒரு படைக்கலம். “உலக்கை சூலம் வேல்” (கந்தபு. சதமுகன். 15). 3. உருண்ட வெருகன் கிழங்கு.

ம. உலக்க. க. ஒலக்கெ.

உலண்டு = உருண்டு நீண்ட கோற்புழு.

உல - உலவை = 1. சுற்றி வீசும் காற்று (திவா.). 2. ஊதை (வாத நோய். “வழுத்துலவைக் குலமுழுதும்” (தைலவ. தைல. 88). உலவையான் = காற்றுத் தெய்வம். (கந்தபு. அரசு. 7).

உலவு - உலகு = 1. உருண்ட ஞாலம். 2. உருண்ட அல்லது சுற்றிவரும் கோள். ம.உலகு.

உலகு - உலகம் = 1. பெரிய உலகு. 2. ஞாலம் (பிங்.). 3. உலகப் பொது (திவ். திருவாய். 6 10 1). 4. நிலப்பகுதி. “மாயோன் மேய காடுறை யுலகமும்” (தொல். அகத். 5). 5. மக்கட்டொகுதி. 6. நன்மக்கள். “உலகம் புகழ்ந்த வோங்குயர் விழுச்சீர்” (திருமுருகு. 124). 7. உயிரினங்கள். “உலக முவப்ப வலனேர்பு திரிதரு”