இட்டறுதி = இக்கட்டான சமையம், வறுமை. இட்டிடை = 1. சிறுத்த இடை. “இட்டிடையின் மின்னிப் பொலிந்து” (திருவாச. 7 16). 2. சிறிது. “இட்டிடை யிடைதனக்கு” (கந்தபு. தெய்வயா. 183). 3. இடையூறு. “மிகுபிணி யிட்டிடைசெய” (திருப்பு. 1053). இட்டிடைஞ்சல் = வறுமை, துன்பம். இட்டிது = 1. சிறிது. “ஆகா றளவிட்டி தாயினும்” (குறள். 478). 2. அண்மை. “இட்டி தாகவந் துரைமினோ” (தேவா, 1240 2). இட்டிமை = சிறுமை, ஒடுக்கம். இட்டிய = சிறிய (ஐங். 215) இட்டு = சிறிது. இட்டிடை = சிறிய இடைவெளி. இட்டேறி = சிறிய வண்டிப்பாதை. இட்டி - சிறு செங்கல் இட்டி = இட்டிகை = மிகச் சிறிய செங்கல். இடுக்கண் = துன்பம், இரக்கம். இடுக்கணி = நெருக்கமான (இடுக்கான) இடம். இடுக்கிடை = நெருக்கம் இடுகுதல் = 1. ஒடுங்குதல். “கண்களை யிடுகக் கோட்டி” (சீவக. 2086). 2. சிறுகுதல். “இடுகிடைத் தோகாய்” (கம்பரா.சித்திர. 19). இடுங்குதல் - உள்ளொடுங்குதல். “கண்ணிடுங்கி” (திவ். பெரியதி. 1 3 4) இடும்பை = 1. துன்பம். “ஏமஞ்சாலா இடும்பை” (தொல். பொருள் 50). 2. வறுமை. “இடும்பையால் அடர்ப்புண்டு” (திவ். பெரியதி. 1 6 5). 3. நோய். “கரப்பிடும்பை இல்லாரைக் காணின்” (குறள். 1056) 4. தீமை. “பூதம்... இடும்பை செய்திடும்” (மணிமே. 1 22) இடுவல் - இடுக்கு. இண்டு = மிகச் சிறிய இடைவெளி அல்லது துளை. இண்டும் இடுக்கும் என்பது உலக வழக்கு. உச்சட்டை = ஒல்லி. உச்சட்டை - ஒச்சட்டை = ஒல்லி. உச்சட்டை - உஞ்சட்டை = ஒல்லி. |