எது - எத்து - எஃது. Te. edi, M. endu. எ - எவ் - எவன், எவள், எவர், எது, எவை. எவ் = எவை. எவன் = என்னது, என்ன. எவன், யாது என்னும் இரு சொற்களுள், முன்னது முற்றும் அறியாப் பொருள்பற்றியும், பின்னது சிறிதறிந்த பொருள்பற்றியும், வினாவாய் வரும். எ - டு : காராமணி என்பது எவன்? இப் பயறுகளுள் காராமணி என்பது யாது? “யாதெவன் என்னும் ஆயிரு கிளவியும் அறியாப் பொருள்வயின் செறியத் தோன்றும்” “அவற்றுள், யாதென வரூஉம் வினாவின் கிளவி அறிந்த பொருள்வயின் ஐயந் தீர்தற்குத் தெரிந்த கிளவி யாதலு முரித்தே” (தொல். 514, 515) எவன் = 1. எம்மாந்தன் (உயர்திணை). 2. என்னது (ஒருமை). 3. என்ன (பன்மை) அஃறிணை. எங்கு - எங்குற்றை = எவ்விடம். எங்குற்றைக்கு = எவ்விடத்திற்கு. எங்குற்றை - எங்குத்தை - எங்கித்தை. “எங்கித்தைக் கன்மமெலாஞ் செய்தாலும்” (சி.சி. 10 6) எங்குற்றைக்கு - எங்குத்தைக்கு. “எங்குத்தைக்குச் செலுமிது” (பதினொ. நம்பி. திருநா. திருவே. 5) எவ் - எவண் = எங்கு. எவன் - என் = எது, என்னது, என்ன, M. enna. என் - என்னை, என்னே, என்னோ. என் - என்னவன், என்னவள், என்னவர், என்னது, என்னவை. என்னவன் = 1. யாவன். 2. எத்தகையன். என்னவன் - என்னன். “என்னன் எவ்விடத்தன்” (இரகு. யாக. 90) “என்னவர் தங்கட் கேனும்” (கந்தபு. கிரவுஞ். 4) |