பக்கம் எண் :

வேர்ச்சொற் கட்டுரைகள்

நுகு - நுகர். நுகர்தல் = 1. உண்ணுதல். “அடிசில் பிறர்நுகர்க” (பு.வெ. 10, முல்லைப். 8). 2. இன்புறுதல். “நின்னணி நல நுகர்கென” (குறிஞ்சிப். 181). 3. வினைப்பயன் துய்த்தல்.

நுகர்ச்சி = 1. உண்ணுகை. “கவியமுதம் நுகர்ச்சி யுறுமோ” (திவ். திருவாய். 8:10:5). 2. வினைப்பயன் துய்ப்பு. “அருந்தவ மாற்றியார் நுகர்ச்சிபோல்” (கலித். 30). 3. துய்ப்புணர்ச்சி. “உருவு நுகர்ச்சி குறிப்பே பாவனை” (மணிமே. 30:189).

நுகு - நொகு - நொக்கு = வெடிப்பு (யாழ். அக.).

நுழு - நூழ் - நூழில் = 1. குழி. 2. குழியுள்ள செக்கு (அக. நி.). 3. கொன்று குவிக்கை. “ஒள்வாள் வீசிய நூழிலும்” (தொல். புறத். 17).

நூழிலர் = செக்கார், வாணியர்.

நூழிலாட்டு = செக்காட்டுவதுபோற் கொன்று குவிக்கை.

நுள் - நொள். நொள்ளுதல் = 1. மொள்ளுதல், முகத்தல். “குடங்கையி னொண்டு கொள்ளவுங் கூடும்” (சிலப். 10 85). 2. விழுங்குதல் (திவா.).

நொள் - நொள்கு. நொள்குதல் = மொள்ளுதல், முகத்தல்.

மொள்ளுதல் நீர்ப்பொருளையும், முகத்தல் கூலம் போன்ற பொருளையும், துளைத்தல் போன்றவே.

நொள் - நொள்ளல் = 1. குழிவு. 2. பார்வையற்றுக் கண் குழிந்த நிலை (W.).

நொள் - நொள்ளை = கண் குழிந்த குருடு. “நொள்ளை நாகில” (திருவிளை. பரிநரி. 14).

நொள் - நெள் - நெள்ளல் = பள்ளம், குழிவு.

நெள்ளல் - ஞெள்ளல் = 1. பள்ளம், பள்ளம் விழுந்த தெரு. “கடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்” (புறம். 15). 2. குற்றம். ஞெள்ளுதல் = பள்ளமாதல்.

நொள் - நொடு - நொடி = வண்டிப் பாதையி லேற்பட்ட குழிப்பள்ளம். பாதை நொடியா யிருக்கிறது (உ.வ.).

நொள் - நொண்டல் = நுகர்கை (திவா.).

நொள் - நொண்டு - நெண்டு. நெண்டுதல் = தோண்டுதல் (நாமதீப. 737).

நொண்டு - நண்டு. நண்டுதல் = கிண்டுதல், கிளறுதல்.