மக்களின் பழக்கவழக்கங்கள் முதன்முதல் நகர் அல்லது நகரத்திலேயே திருந்தின. அதனால், சிற்றூர் வாணனையோ நாகரிகமில்லாதவனையோ நாட்டுப்புறத்தான் என்று இழித்துக் கூறுவது இன்றும் வழக்கமா யிருக்கின்றது. வாழ்க்கைத் திருத்தம் அல்லது பண்பாடு நகரத்தில் தோன்றியதானாலேயே, நாகரிகம் என்னும் பெயர்த்தாயிற்று. நகர் - நகரகம் - நகரிகம் - நாகரிகம். நகரிப் பழக்கம் = நகர்வாணரின் திருந்திய ஒழுக்கம். நகர்ப்புறத்தான் (நாகரிகன்) x நாட்டுப்புறத்தான் அல்லது பட்டிக்காட்டான் = திருந்தாத பழக்கவழக்கத்தான். ஒ.நோ.: E. urban = living in a city or town, urban = polite, urbanity = polished manners. L. civis = citizen, civil = polite, civilization = advanced stage in social development. முதற்கண் நகரங்களில் வழங்கியதனாலேயே, இற்றை வடமொழி யெழுத்து நாகரி யெனப்பட்டது. வடமொழி தேவமொழி யென்னும் ஏமாற்றினால், அது தேவநாகரியென வழங்கும். |