பக்கம் எண் :

3

1

நுல்1 என்னும் வேர்ச்சொல்

அடிப்படைக் கருத்து தோன்றல்.

வழிநிலைக் கருத்துகள் இளமை, சிறுமை, மெலிவு, நுண்மை, கூர்மை, நுனிமை, முன்மை முதலியன.

நுல் - நல் - நன் - நனை. நனைதல் = 1. தோன்றுதல். “மகிழ்நனை மறுகின் மதுரையும்” (சிறுபாண். 67). 2. அரும்புதல். “பிடவ மலரத் தளவ நனைய” (ஐங். 499).

நனை = அரும்பு. “மாநனை கொழுதி மகிழ்குயி லாலும்” (நற்.9).

நுல் - நுரு = 1. இளம்பிஞ்சு. 2. அறுத்த தாளில் விடும் தளிர் (யா. வ.).

நுரு - நொரு = 1. சிறுபிஞ்சு. 2. காய்ப்பு மாறினபின் தோன்றும் பிஞ்சு. 3. விளைந்த பயிரின் அடியில் அல்லது கணுவில் தோன்றும் இளங்கதிர்.

நொருக்காய், நொருப்பிஞ்சு என்பன யாழ்ப்பாண வழக்கு.

நுல் - நல் - நறு - நாறு. நாறுதல் = தோன்றுதல், “திருநாறு விளக்கத்து” (பதிற். 52 13). 2. பிறத்தல். “தேர் பத்தினன் மகவென நாறி” (கல்லா. 94 25). 3. முளைத்தல். “பாத்தி விதைத்தாலும் நாறாத வித்துள” (பழ. 93).

நாறு = 1. முளை (W.). 2. நாற்று. “நாறிது பதமெனப் பறித்து” (சீவக. 45).

நாறு - நாற்று = 1. இளம்பயிர். 2. பறித்து நடக்கூடிய பயிர்.

நுல் - நுன் - நுன்னி - நன்னி = 1. மிகச் சிறியது. 2. சிறியது. “நன்னிக் குரங்கும் கொசுகும் பகையோ நமக்கென் றானே” (இராமநா. உயுத். 1).