நில் - நிலு - நிலுவை = 1. தங்குகை. “நோயு நிலுவை கொண்டது” (திருப்பு. 1111). 2. கட்டண எச்சம் (arrears). “ஏது குடி நிலுவை” (பணவிடு. 169). ம. நிலவு, தெ. நிலுவ. நிலு - நிறு. நிறுத்தல் = 1. நிற்கச் செய்தல். 2. எடை நிற்கச் செய்தல். 3. துலை தூக்கி எடைபார்த்தல். 4. தீர்மானித்தல். “நாள்வரை நிறுத்து” (கலித். 31 23). 5. அமைத்தல். “காமர்சாலை தளிநிறுமின்” (சீவக. 306). 6. வைத்தல். “நிறுத்த முறையானே” (நன். 109, மயிலை.). ம. நிறுக்க. நிறுப்பான் = 1. துலாக்கோல் (பிங்.). 2. துலை யோரை (திவா.). நிறு - நிறுவை = 1. எடை பார்ப்பு, எடை. நிறு - நிறை = 1. நிறுக்கை (பிங்.). 2. எடையளவை. “காவெ னிறையும்” (தொல். தொகை. 27). 3. நூறு பலங்கொண்ட அளவை (சூடா.). 4. துலாக்கோல் (பிங்.). 5. துலையோரை (திவா.). நிறைகோல் = துலாக்கோல். நிறு - நிறுத்து. நிறுத்துதல் = 1. நிற்கச் செய்தல். 2. நிமிர்ந்து நிற்கச் செய்தல். “வெயில்வெரின் நிறுத்த பயிலிதழ்ப் பசுங்குடை” (அகம். 37). 3. நிலைநாட்டுதல். நீ தான் என் குடும்பத்தை நிறுத்த வேண்டும் (உ.வ.). 4. மனத்தை ஒரு நிலையில் இருத்துதல். 5. மேற் செல்லாதிருக்கச் செய்தல். 6. தள்ளிவைத்தல். 7. வாசிக்கும் போதும் பாடும்போதும் உரிய விடங்களில் நிறுத்தல் செய்தல். 8. விலக்குதல். என் வேலைக்காரனை நிறுத்திவிட்டேன் (உ.வ.). 9. தொழில் அல்லது வினை செய்யா தொழிதல். அவர் வணிகத்தை நிறுத்திவிட்டார், அவன் கட்குடிப்பதை நிறுத்திவிட்டான் (உ.வ.). 10. விளக்கை யவித்தல். “விளக்க மெய்யிற் காற்றினா னிறுத்தி” (உபதேசகா. சிவத்துரோ. 492). ம. நிறுத்துக, க. நிறிசு. நிறுத்து - நிறுத்தம் = 1. நிறுத்துகை. 2. நிறுத்துமிடம். நிறுத்தி வைத்தல் = ஒத்திவைத்தல். நிலைநிறுத்தல் = நிலையாக நாட்டல். நிறு - நிறுவு, நிறுவுதல் = 1. நிறுத்துதல். மறைமலையடிகளை நினைவுகூர ஒரு படிமை நிறுவப்பட்டது (உ.வ.). 2. நாட்டுதல். “தம்புகழ் நிறீஇ” (புறம். 18). நிறுவு - நிறுவனம் = தொழிற்சாலை, கல்விச்சாலை, ஆராய்ச்சிக்கூடம் முதலியவற்றின் தோற்றுவிப்பு அல்லது அமைப்பு (establishment). |