பக்கம் எண் :

71

. பொருள், . பொருளு, து.பொர்லு.

பொரு - போர் = 1. பொருந்துகை. “திண்போர்க் கதவம்” (மதுரைக். 354). 2. சண்டை. “குன்றேறி யானைப்போர் கண்டற்றால்” (குறள். 758). 3. இகல் (போட்டி). “வீணைவாட் போர்க்கலாம்” (சீவக. 620).

போர்த்தல் = 1. மூடுதல். “பெற்றம் புலியின்றோல் போர்த்து மேய்ந் தற்று” (குறள். 273). 2. மூட அணிதல். “ஆரம்போர் திருமார்பை” (கம்பரா. இராவணன் வதை. 240). 3. சூழ்தல். “விண்ணோ ரெங்கோன் புடையிற் போர்த்தார்” (கந்தபு. சிங்கமு. 457).

போர்க்கதவு = 1. பல பலகைகளை இணைத்த கதவு. “புலிப்பொறிப் போர்க்கதவின்” (பட்டினப். 40). 2. இரட்டைக் கதவு (சிலப்.).

பொல் - போல். போலுதல் = ஒத்தல். போல = உவமவுருபு. “பொற்பப் போல” (தொல். உவம. 11).

போல் - போலி = 1. ஒத்தது. 2. எழுத்துப்போலி. 3. வினைத்திறத்தில் மட்டமானது. எ-டு: போலிவேலை. 4. மட்டமான பொருள். எ-டு: போலிக்கல். போலும் - ஒப்பில் போலி. போன்றான் - போஞ்சான் = மட்டமான வேலைப்பாடுள்ளது.