பக்கம் எண் :

1

முன்னுரை


“ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் - ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னே ரிலாத தமிழ்.”

குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம்

வரலாற்று நூல், நிலநூல் (Geology), கடல்நூல், (Oceanography), உயிர்நூல் (Biology), மாந்தனூல் (Anthropology) முதலிய பலநூல் ஆராய்ச்சியாளரும் குமரிக்கண்டமே (Lemuria) மாந்தன் பிறந்தகமாயிருந்திருத்தல் வேண்டுமென, ஓரிரு நூற்றாண்டுகட்கு முன்பே கூறிப் போந்தனர். மொழிநூலும் தமிழிலக்கியமும், அவர் தத்தம் நூற்சான்று கொண்டு செய்த முடிபை வலியுறுத்துகின்றன. ஆயினும், வேற்றோர் பகைமையாலும் தன்னோர் அக்கறையின்மையாலும், இவ் வுண்மை இன்னும் மறையுண்டு கிடக்கின்றது.

குமரிக்கண்டமே மாந்தன் பிறந்தகம் என்பதற்குக் காரணங்களாவன:

(1) குமரிக்கண்டத்தின் தொன்முது பழைமை

மாந்தன் மட்டுமன்றி அவனுக்கு முந்திய விலங்கும், பறவையும் தோன்றுமுன்புகூட, குமரிக்கண்டம் நீண்ட காலமாக நிலைத்திருந்ததென்று, யோவான் இங்கிலாந்து (John England) கூறுகின்றார்.

(2) தென்ஞால மக்களின் முந்தியன்மை (Primitiveness)

முந்தியல் மாந்தருட் பெரும்பாலார் தென்ஞாலத்திலேயே வாழ்கின்றனர். செவ்விந்தியரின் முன்னோரும் எசுக்கிமோவரின் முன்னோரும் தென்ஞாலத்தினின்றே ஆதியில் வடஞாலத்திற்குச் சென்றதாகத் தெரிகின்றது.