பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

உறு - உறை = புளித்த மோர்.

குள் - கள் - கடு. கடுத்தல் = புளித்தல். கடு - காடி = புளிப்பு, புளித்த கள், புளித்த கஞ்சி, ஊறுகாய்.

கடு - காட்டம் = கடும்புளிப்பு.

சுள் - சுடிகை = பனங்கள். சுள் - சூழிகை = கள்.

சுர் - சூர் = காட்டம்.

“சூர்நறா வேந்தினான்”                                (பரிபா. 6:72)

சுள் - சுண்டு = கள். சுண்டுசோறு = சுட்சத்துள்ள சோறு.

சுண்டு - சுண்டம் = கள். சுண்டகன் = கள்ளிறக்குவோன்.

சுண்டு - சுண்டி. சுண்டியுண்டை = புளிக்க வைக்குங் குளிகை.

சுண்டு - சுண்டை = கள்.

சுண்டி - சொண்டி = சுண்டியுண்டை.

கடும் புளிப்பிற்குத் தாக்குவது போன்ற உறைக்கும் திறனுண்மை பற்றியே, பாலைப் புளிக்கவைத்தலைப் பிரைகுத்துதல் என்றும் பிரை தைத்தல் என்றும் கூறுவர். தைத்தல் குத்துதல்.

தை (தய்) - தயிர் = பிரை தைத்த பால், ஒ.நோ: மை - மயிர்.

xxvi. சினத்தல்

சினம் தீயைப் போன்றதாதலின், எரிதலைக் குறிக்கும் சொற்கள் சினத்தையும் குறிப்பனவாயின.

“சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.”                                   (குறள். 306)

என்று வள்ளுவர் கூறுதல் காண்க.

உல் - உலறு. உலறுதல் = சினத்தல்.

உருத்தல் = சினத்தல். உருத்திரம் = சினம். உரு - உருப்பு - உருப்பம் = சினம்.

உல் என்னும் வேரினின்று பிறந்த அழலுதல் அனலுதல் அன்றுதல் எரிதல் முதலிய வினைகளும் சினத்தலைக் குறிக்கும்.

குருத்தல் = சினத்தல்.