பக்கம் எண் :

25

கவ - கவல். கவலுதல் = பல கவர்படுதல். பல கவர்படுதல் போலப் பல நினைவுகொண்டு கலங்குதல். கவல் - கவலை = கவை, கிளை, கவர்த்த வழி, பல நினைவுக்கலக்கம், அக்கறை.

கவல் - கவலி. கவலித்தல் = கவலைப்படுதல்.

கவ் - கவ்வை = கவலை, கவலைப்பட்டுச் செய்யுங் காரியம், காரியம், வேலை. கவ் - கவை = காரியம். ஒரு காரியத்திற்கும் பயன்படாதவனைக் கவைக்குதவாதவன் என்பர்.

கவலி - கவனி. கவனித்தல் = கவலையோடு (கருத்தோடு) பார்த்தல். கவனி - கவனம்.

5. குழவி வளர்ப்பொலிப் படலம்

குழவி வளர்ப்புக் காலத்தில் குழவி வாயிலும் தாய் வாயிலும் பிறக்கும் ஒலிகள், குழவி வளர்ப்பொலிகளாம். அவற்றுள், குழவி யொலிகள், உள்ளிய (voluntary) வொலி, உள்ளா (involuntary) வொலி என இருதிறப்படும். பச்சிளங்குழவிகள் எண்ணாது இயல் பாய்க் கத்தும் ஒலிகள் உள்ளாவொலியும், பேச்சுக் கற்கும் பிள்ளை கள் தப்பொலிகளாகக் கூறும் திருந்தாச் சொற்கள் உள்ளிய வொலியும் ஆகும்.

1) குழவியொலிகள்

(1) உள்ளா வொலி

இங்கா = பால்:

குழவிகள் இயல்பாக மிடற்றிற் பிறப்பிக்கும் ‘இங்கு’ என்னும் பொருளற்ற வொலிக்கு, பால் என்றும் பொருளைச் செவிலியர் படைத்துக் கொண்டனர்.

அம்மா அப்பா என்னுஞ் சொற்கள் இவ்வகையிற் பிறந்தன வாக, மேலை மொழிநூல் வல்லார் கொள்வர். அது பொருந்தாது என்பது பின்னர் விளக்கப் பெறும்.

(2) உள்ளிய வொலி

மிய்யா (பூனை)
ளொள் ளொள் (நாய்)
பீப்பீ (ஊதுகுழல்)
டும்டும் (மேளம்)