பக்கம் எண் :

33

ஊகாரச் சுட்டால் முறையே உணர்த்தப்பெறுங் கருத்துகளில், முதன்மையானவையே இங்குக் குறிக்கப்பட்டுள. இவற்றின் நுட்ப வேறுபாடுகளையும், இவற்றுக் கிடையிடைத் தோன்றும் ஏனைய நுண் கருத்துகளையும், நூலுட் காண்க.

(3) ஈகாரச் சுட்டுக் கருத்து வளர்ச்சி

ஈகாரச் சுட்டு, முதலாவது அண்மையைக் குறிக்கும். அண்மை முன்மைக்குப் பின்மையாதலாலும், ஈகாரத்தை யொலிக்கும்போது வாய் பின்னுக்கிழுப்பதாலும், அண்மைக் கடுத்த ஈகாரச் சுட்டுக் கருத்துப் பின்மையாகும்.

பின்மைக் கருத்தில் தோன்றுவது பிற்படற் கருத்து.

மாந்தன் நின்ற நிலையில் இயற்கையாய் ஒன்றை இழுப்பது முன்னின்று பின்னாதலின், பிற்படற் கருத்தினின்று பிற்படுத்தற் கருத்தாகிய இழுத்தற் கருத்துப் பிறக்கும்.

மேனோக்கிச் சென்ற பொருள் பிற்படுதல் இறங்கலாதலின், பிற்படற் கருத்தினின்று இறங்கல் அல்லது கீழுறற் கருத்துத் தோன்றும்.

ஈகாரச் சுட்டா லுணர்த்தப்பெறும் பெருங் கருத்துகள், அண்மை பின்மை கீழுறல் என்னும் மூன்றே. முதுகிற்குப் பின் நிகழ்வது ஒருவருக்குந் தெரியாமையானும், முன்னோக்கிக் கொண்டு பின்னுக்குச் செல்வது மாந்தனுக்கும் மற்ற வுயிரிகட்கும். இயற்கையன்மையானும், பின்மைக் கருத்தில் வேறொன்றுந் தோன்றற்கில்லை. மேனின்றிறங்கும் ஒரு பொருள் நிலத்தில் அல்லது நீரில் விழுந்து அதற்குள் புகினும் கீழுறல் அல்லது இறங்குதலாகிய அளவே ஈகாரச் சுட்டுக்கருத் தெல்லைக் குட்பட்டதாம். ஒரு பொருளுக்குட் புகுவதெல்லாம் துளைத்தலின் பாற்பட்டதாகலின், அது ஊகாரச் சுட்டின் ஆட்சிக்குட்பட்டதென அறிக.

(4) ஆகாரச் சுட்டுக் கருத்து

ஆகாரச்சுட்டு, ஒரு திசையையுஞ் சிறப்பாய்ச் சுட்டாது சேய்மையை மட்டுங் குறித்தலானும், ஒருசார் சேய்மை கண்முன் தோன்றும் அண்மைக்கப்பாற் பட்டதாதலானும், சேய்மையின் தொடர்ச்சி யெல்லாம் சேய்மையே யாதலானும், சேய்மைக் கருத்தினின்று வேறொரு கருத்துந் தோன்றுதற்கின்று.