பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

பின் - பிற - பிறவு - பிறகு - பிறக்கு. பிறக்கிடுதல் = பின்னுக்குச் செல்லுதல்.

பிறக்கு - பிறங்கு - பிறங்கடை = பின்னால் வரும் உரிமையாளன் (வாரிசு).

பின் - பினம் - பிறம் - பிறம்பு. பிறம்பத்தங்கால் = பின்னங்கால்.

பிறம் - பிடம் - பிடர் - பிடரி = தலையின் பின்புறம்.

பிடம் - பிட்டம் = பின்புறம். பின்புறத்தின் கடை அல்லது அடிப்பகுதி (குண்டி).

பிட்டம் - புட்டம். பிட்டம் - பிட்டி - புட்டி = பறவையின் பின்புறம்.

பிறம் - புறம் - புறன். புறக்கடை = வீட்டின் பின்பக்கம்.

புறங்கூறுதல் = பின்னாற் பழித்தல். புறன் - (புரனி) - புறணி = புறங்கூற்று.

புறனே = பின்பு, பிந்தி. புறனண்டை = பின்புறம்.

பிறகு - புறகு = பின்பு.

ii. மறுநிலை

இன் - இன்னும் = திரும்பவும், மேலும், வேறும்.

இன்னொன்று = வேறொன்று. இன்னொரு = வேறொரு, மற்ற.

இன் - ஏன். ஏனோர் = மற்றோர். ஏன் - ஏனை = மற்ற.

பின் = திரும்ப, வேறு. பின்னும் = திரும்பவும்.

பின்னும் பின்னும் = திரும்பத் திரும்ப.

பின்னொன்று = வேறொன்று. பின்னே யார்? = வேறு யார்?

பின - பிற - பிறிது. பிற - பிறகு = வேறு. பிறகு - பிறக்கு = வேறாக.

பிறம் - பிறன் = வேறொருவன், மற்றவன், அயலான்,

பிறம் - புறம் - புறம்பு = மற்றை.

iii. முதுகு

முதுகு பின்புறமிருப்பதால் பின்மைப் பெயர் முதுகைக் குறித்தற்காயிற்று.

பின் - பிக்கு. பிறம் - பிறவு - பிறகு = முதுகு.

பிறகு - பிறக்கு = முதுகு.