பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

முடிவுரை

இதுகாறுங் கூறியவற்றால், தமிழ் குமரிநாட்டில் பிறமொழிச் சார்பின்றித் தானே தோன்றி வளர்ந்த தொன்முதுமொழி யென்றும்; அது உணர்வொலி, விளியொலி, ஒப்பொலி, குறிப்பொலி, வாய்ச் செய்கையொலி, குழவி வளர்ப்பொலி, சுட்டொலி என்னும் எழுவகை நிலைக்களத்தினின்றும் எழுந்த சொற்களின் தொகுதியென்றும்; அந் நிலக் களங்களுள் சுட்டொலி - அதனுள்ளும் முன்மைச்சுட்டு - மிகச் சிறந்ததென்றும்; தமிழ்ச்சொற்களுள் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக் காடு ஊகாரச் சுட்டினின்றே தோன்றியவையென்றும் அறிந்துகொள்க.

இந் நூலிற் காட்டப்பட்டுள்ள நெறிமுறைகளெல்லாம் கலை முறைப்பட்டவை யென்பதும், ஒழுங்கானவை யென்பதும், கீழ்வரும் மூவகை எடுத்துக்காட்டு வரிசைகளால் அறியலாகும்.

1. சொற்பொருட் காரணம்

பல சொற்களின் பொருட்காரணம் இந் நூலிற் கூறியுள்ள நெறிமுறைகளாலேயே அறிதல் ஒண்ணும்.

எ-டு:

பருந்து (பரந்து) = மிக வுயரப் பறக்கும் பறவையினம்.

கலுழன் = இருநிறங் கலந்த பறவையினம்.

கழுகு = உயரப் பறப்பவற்றுள் மிகப் பருத்த பறவையினம்.

அணில் = முதுகில் வரியுள்ள அரியுயிரி (rodent).

ஏம் - (ஏமை) - யாமை - ஆமை = பாதுகாப்பான ஓடுள்ள ஊருயிரி (reptile).

கரட்டை = கரட்டுத் தோலுள்ள ஓணான்.

2. சொல்வடிவு வரலாறு

சில சொற்களின் வடிவு வந்த வரலாற்றையும் இந் நூல் நெறிமுறைகளே தெரிவிக்கும்.