பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

மள் - மரு - மறு = குற்றம். மச்சு = குற்றம்.

மயல் = அழுக்கு. மயல் - மயலை = அழுக்கு.

மாழ் - மாசு = குற்றம். ஒ.நோ: காழ் - காசு.

மை = குற்றம்.

vi. மறைவு

கருமையில் பட்ட பிற நிறமும் இருண்ட இடத்திலுள்ள பொருள்களும் கண்ணிற்குத் தெரியாது மறைந்திருப்பதால், கருமைக் கருத்தில் மறைவுக் கருத்துத் தோன்றும்.

கள் - கள்ளம் = மறைவு, திருட்டு, வஞ்சனை. கள் - கள்ளன் = திருடன்.

கள் - கள்வு - களவு = மறைவு, திருட்டு.

கள்வு - கள்வன் = திருடன்.

கள் - (கர்) - கர - கரவு - கரவடம் = களவு. கரத்தல் = மறைதல், மறைத்தல். கரவு = வஞ்சகம், களவு.

மறுத்தல் = இல்லையென்று சொல்லால் மறைத்தல்.

மறு - மற. மறத்தல் = மனத்தில் மறையப் பெறுதல்.

மறு - மறை. மறை = பொதுமக்கட்கு மறைந்திருக்கும் செய்திகளையும் உண்மைகளையும் கொண்ட நூல்.

“நரம்பின்மறை” = இசைநூல்.

மால் - மாலம் = பாசாங்கு. மாள் - மாய் - மாயம் = மறைவு, வஞ்சனை. மாய் - மாயை = ஆன்மாவின் அறிவை மறைப்பது. ஒ.நோ: சாய் - சாயை.

மாயமான் = வஞ்சனையுள்ள மான். மாயமாய் மறைந்துவிட்டது என்பது வழக்கு. மாயவித்தை மாயமாலம் முதலிய பெயர்களை நோக்குக.

(5) காணல் துறை

அகக்கண்ணாற் காணலும் புறக்கண்ணாற் காணலும் எனக் காணல் இருவகை. முன்னது கருதல்; பின்னது நுகர்தல்.

i. கண்டறிதல்

கண்டறிதலாவது புறக்கண்ணாற் காணல்.