பக்கம் எண் :

37

விளக்குக் கொளுத்துதல் விளக்குப் பொருத்துதல் என்னும் வழக்குகளைக் காண்க.

முள் - மூள் - மூட்டு. தீப்பற்றவைத்தல், தீ மூட்டுதல் என்பன வழக்கு. மூட்டுதல் = பொருத்துதல்.

மூட்டு - மூட்டம்.

மூட்டு - மாட்டு. மாட்டுதல் = கொளுவுதல், தீப்பற்ற வைத்தல். மாட்டு = மாட்டி. தலைப்பாகை மாட்டி சட்டை மாட்டி என்பன மாட்டுங் கருவிகள்.

மாட்டு - மாட்டல் = தலைமுடியில் மாட்டும் அணி.

மாட்டு = செய்யுளில் ஓரிடத்திலுள்ள தொடரை மற்றோரிடத்திலுள்ள தொடரொடு பொருத்திப் பொருள் கோடல்.

iv. கொல்லுதல்

அரிமா புலி முதலிய விலங்குகள் ஓர் உயிரைக் கொல்லற்கே பற்றுதலானும், கொல்லும் விலங்குகளும் மக்களும் ஓர் உயிரியைப் பற்றுதலுங் கொல்லுதலோ டொக்குமாதலானும், பற்றுதற் கருத்தில் கொல்லுதற் கருத்துத் தோன்றிற்று. ஆங்கிலத்திலும் பற்றுதலைக் குறிக்கும் seize என்னும் சொல், கொல்லுதலைக் குறித்தல் காண்க.

கொள் - கோள் = கொலை. கொள்ளுதல் = பற்றுதல், கொல்லுதல்.

கோளரி = கொல்லுஞ் சிங்கம்.

‘புலிகோட்பட்டான்’ ‘பேய்கோட்பட்டான்’ முதலிய தொடர்கள், புலியினாலும் பேயினாலும் கொல்லப்பட்டதைக் குறித்தல் காண்க.

கொள் - கொல் - கொலை.

கொல் - கொல்லன் = மரத்தைக் கொல்பவன், தச்சன், கம்மியன், இருப்புக்கொல்லன்.

“மரங்கொல் தச்சன்”                                              (சிலப். 5:29)

ஐவகைக் கொல் தொழில்களுள் முலாவது எழுந்தது தச்சு.

(9) ஒன்றல் துறை

இரு அல்லது பல பொருள்கள் ஒன்றாகப் பொருந்துதல் ஒன்றல்.