பக்கம் எண் :

முதற்றாய்மொழி அல்லது தமிழாக்க விளக்கம்

வட்டு - வட்டணை - (1) வட்டச் செலவு.

“மாப்புண்டர வாசியின் வட்டணைமேல்”                     (கம்பரா. படைத். 97)

(2) இடசாரி வலசாரியாகச் சுற்றுகை.

“சுற்றிவரும் வட்டணையில்”                               (பெரியபு. ஏனாதி. 29)

v. கட்டுதல்

ஒரு பொருளை நூலாலும் கயிற்றாலும் சுற்றிக் கட்டுவதால், சுற்றுதற் கருத்திற் கட்டுதற் கருத்துத் தோன்றிற்று.

சுற்றுதல் = ஆடையை அரையைச் சுற்றிக் கட்டுதல்.

புரி - பரி - வரி. வரிதல் = கட்டுதல். வரித்தல் = கட்டுதல். வரி = கட்டும் அரசிறை. உழவர் கண்டுமுதலில் ஆறிலொரு பகுதியை அளந்து சாக்கிற் கட்டியதனால், அரசிறை வரி எனப்பட்டது. அரிசி பிடித்தல் என்பது எங்ஙனம் அரிசியைச் சாக்கிற் பிடித்து வாங்குதலைக் குறிக்குமோ, அங்ஙனமே வரி கட்டுதலென்பதும் வரிப்பகுதியைச் சாக்கிற் கட்டி வரித்தண்டலாளரிடம் ஒப்புவித்தலைக் குறிக்கும்.

முள் - முடு - முடி - முடிச்சு = வளைத்துக் கட்டிய கட்டு, முடிச்சுப்போன்ற மரக்கணு.

முடி = வளைத்துக் கட்டிய கட்டு. முடிதல் = வளைத்துக் கட்டுதல்.

முடி - முடிப்பு = முடியப்பட்ட பொருள்.

vi. சுழலுதல்

சுழலுதலாவது, ஒரு பொருள் தன்னைத் தானே சுற்றுதல். சுழற்றுதல் அங்ஙனஞ் சுற்றுவித்தல்.

உல் - உலம் = சுழற்சி. உலம்வா - உலமா - உலமரல்.

உலமருதல் = சுழலுதல், மனம் சுழலுவதுபோல் வருந்துதல்.

உழலுதல் = சுழலுதல். உழல் - உழலை = உழலும் ஆலை யுலக்கை அல்லது வாயிற் குறுக்குமரம்.

உழல் - உழற்று - உழற்றி = சுழற்சி.

உழல் - உழன்றி = மாட்டுக் கழுத்தில் கட்டும் உழலைத் தடி.

உல் - அல் - ஆல் - ஆலு - ஆடு. ஆடுதல் = சுழலுதல்.