என்று பழந்தீவினையையும் வினை என்று பிறப்பிற்கேதுவான செயலையும், காரியம்2 என்று கருமாந்தரத்தையும் குறிப்பர். நாற்றம் என்பது செய்யுள் வழக்கில் நற்பொருளுணர்த்தும். “ நாற்றமும் தோற்றமும் ஒழுக்கமும் உண்டியும்’’ (களவியல், ) என்றார் தொல்காப்பியர். “ நாற்றம் உரைக்கும் மலருண்மை’’ (நான்மணிக்.47) என்றார் விளம்பிநாகனார். இழைத்தல் என்னும் வினை, பொதுவாய்த் தீமை செய்தலையே குறிக்கும். 5. விரிப்பு (Extension) ஒரு பொருட்குச் சிறப்பான சொல்லை, அதற்கினமான பிறபொருட்கும் வழங்குவது விரிப்பாம். கைம்மை நோன்பு நோற்றவளை மட்டும் குறிக்க வேண்டிய கைம்பெண் (கைம்பெண்டு, கைம்பெண்டாட்டி) என்னும் பெயர், இன்று கணவனையிழந்த பெண்டிர் எல்லார்க்கும் பொதுப் பெயராய் வழங்குகின்றது. பொன் என்பது பலவகைத் தாதுக்களையும் பொதுவாகச் சுட்டுவதும், செம்பு என்பது பலவகைத் தாதுக்களாலும் செய்யப்படும் ஒருவகைக் கலத்தைக் குறிப்பதும், தோடு என்பது ஓலையாற் செய்யப்பட்ட காதணியை மட்டும் குறிக்காது பிறகருவிகளாற் செய்யப்பட்டவற்றையும் குறிப்பதும், புள் என்பது பறவை நிமித்தத்தை மட்டுமன்றிப் பல்வேறு நிமித்தங்களையும் பொதுவாகக் குறிப்பதும் விரிப்பின் வகையாம். இரும்பிற்குக் கரும்பொன் என்றும், வெள்ளிக்கு வெண்பொன் என்றும் பெயர். “ தூண்டிற்பொன் மீன்விழுங்கி யற்று’’ (குறள். 931) என்னுங் குறள்தொடரில், பொன் என்பது இரும்பைக் குறித்தது. வாய்ச்சொல்லாற் குறிக்கப்படும் குறியை வாய்ப்புள் என்பர். |